கிழக்கு மாகாணம்

திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத்தளம் - மைத்திரியிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கும் ரணில் தரப்பு

மகிந்த தரப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி
பதிப்பு: 2019 ஜன. 09 22:30
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 09 23:10
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Trinco
#Srilanka
#America
#Navy
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் உள்ள இலங்கைக் கடற்படை முகாமில் அமெரிக்கக் கடற்படைத் தளமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அது குறித்து தனக்கு எதுவுமே தெரியாதெனக் கூறியுள்ளார். அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்குரியது என்றும் வெளியுறவு அமைச்சுக்கு அந்த விடயத்தில் தொடர்பில்லை எனவும் திலக் மாரப்பன கூறியுள்ளார். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் மகிந்த தரப்பு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அமெரிக்கக் கடற்படைத் தளம் திருகோணமலையில் அமைக்கப்படுகின்றமை ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்தவின் ஆதரவு உறுப்பினரான விமல் வீரவன்ச நேற்றுச் செவ்வாய்க்கிழமை அமெரிக்கக் கடற்படைத் தளம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் வந்து செல்வதாகவும் இலங்கைக் கடற்படை அதற்கு ஒத்துழைப்பு மற்றும் சேவை உதவிகளை வழங்கி வருவதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இராசாயன ஆயுதங்கள் சமவாய திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை மீதான அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அமைதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, திருகோணமலைத் துறைமுகத்தில் உள்ள இலங்கைக் கடற்படை முகாமில் அமெரிக்க கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக ஜே.வி.பியும் கேள்வி எழுப்பியுள்ளது. உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறும் ஜே.வி.பி கூறியுள்ளது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதிகாரபூர்வமாக இதுவரை கருத்துக்களை வெளியிடவில்லை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பாதுகாப்பு அமைச்சு செயற்படுவதாகவும் முப்படைகளின் தளபதி என்ற மைத்திரிபால சிறிசேன, மகிந்த தரப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் ரணில் தலைமையிலான அரசாங்கம் கூறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.