வவுனியாவில்

பொங்கல் தினத்தன்று கண்டன ஆர்ப்பாட்டம் - போராட்டத்தைக் குழப்ப முயற்சி - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசனம்

தேங்காய் உடைத்து நேற்றைய தினமும் கண்டனப் போராட்டம்
பதிப்பு: 2019 ஜன. 10 10:16
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 10 10:30
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Protest
#RelationsOfMissingPerson
#Vavuniya
#Srilanka
சர்வதேச நாடுகளின் துணையுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வவுனியாவில் நேற்று புதன்கிழமை கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
வவுனியாவில் 689 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா - குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் மதியம் 12 மணிக்கு தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து நடைபவனியாக வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள உண்ணாவிரத கொட்டகைக்கு சென்று அங்கு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் 2 வருடத்தை நிறைவுசெய்யவுள்ள நிலையில், இதுவரை தமக்கு எவ்வித தீர்வும் பெற்றுத்தரப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து கூர்மை செய்தித் தளத்திற்கு கருத்து வெளியிட்ட வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா,

இந்தத் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டு வருடத்தை நிறைவுசெய்யவுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைக்கான 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இலங்கையில் பல தரப்பட்ட அமைப்புக்களைச் சந்தித்துள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து மகஜரைக் கையளித்திருந்தோம். அப்போது எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை.

எமக்கான தீர்வுக்கான வழிமுறைகள் பல வழிகளில் முன்வைக்கப்பட்ட போதும் இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தால் நிறைவேற்றப்படாத நிலையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலாவது எங்களது கேரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசிற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலமாக எங்களது உறவுகளின் விடுதலையையும் எங்களுக்கான தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் தமிழர் பண்டிகையான தைப்பொங்கல் தினத்தன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து பாரிய கண்டனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.