யாழ்ப்பாணத்தில்

ஆசிரியைகளை இடமாற்றுமாறு வலியுறுத்தி வட்டுக்கோட்டை பிளவத்தை அமெரிக்க மிசன் பாடசாலை மாணவர்கள் போராட்டம்

கிராமப்புற பாடசாலைகளில் அநீதி இடம்பெறுவதாக பெற்றோர் விசனம்
பதிப்பு: 2019 ஜன. 10 14:54
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 10 15:00
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Students
#Protest
#Srilanka
ஆசிரியைகளை இடமாற்றுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பிளவத்தை அமெரிக்க மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். பாடசாலை நாளான இன்று காலை 7 மணிக்கு பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
 
சகோதரிகளான ஆசிரியைகள் இருவர் பல வருடங்களாக இப்பாடசாலையில் கல்வி கற்பிப்பதாகவும், அவர்களது கற்பித்தலில் தமக்கு திருப்தி இல்லை எனவும் தெரிவித்த பெற்றோர்களும் பழைய மாணவர்களும், சம்மந்தப்பட்ட ஆசிரியைகளை இடமாற்றம் செய்யுமாறு சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தை ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

குறித்த ஆசிரியைகளில் ஒருவருக்கு இடமாற்றம் வந்திருந்த போதிலும் கல்வி அதிகாரிகள் அவரை மீண்டும் அப்பாடசாலையில் கடமையாற்ற அனுமதி வழங்கியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைப் பங்கீடு செய்வதில் கல்வி அதிகாரிகள் கடைப்பிடிக்கும் முறையற்ற நடைமுறைகளால் சிறிய பாடசாலைகளும் கிராமப்புற மக்களும் பாதிக்கப்படுவதாக, பெற்றோர் இதன்போது விசனம் வெளியிட்டதாக கூர்மை செய்தியாளர் குறிப்பிட்டார்.

தரம் 1 - 5 வரையான மாணவர்களுடன் பெற்றோரும் இணைந்துள்ளதுடன் உயர் கல்வி அதிகாரிகள் வருகைதந்து உறுதிமொழி வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.