இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நிதி நிலைமை

ரணில் அரசாங்கம் மூன்று ஆண்டுகளில் நான்கு ரில்லியன் ரூபாய்கள் கடன் பெற்றுள்ளதாக மகிந்த தரப்பு குற்றச்சாட்டு

நிதியைப் பெற அமைச்சர் மங்கள அமெரிக்கா பயணம் - சீனாவுடனும் பேச்சு
பதிப்பு: 2019 ஜன. 13 15:27
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 14 22:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மைத்திரி ரணில் அரசாங்கம் கடந்த மூன்று வருடகாலதட்தில் நான்கு ரில்லியன் ரூபாய்கள் கடன்களைப் பெற்றுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் 10 வருட கால ஆட்சியில் ஏழு ரில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் பெறப்பட்டிருந்ததாகவும் ஆனால் ரணில் அரசாங்கம் இவ்வளவு கடன்களை பெற்றதன் நோக்கம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் ப்ந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டார்.
 
அதேவேளை நல்லாட்சி என கூறிக் கொண்டு 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் அரசாங்கம் கடந்த மே மாதத்தில் மாத்திரம் 800 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சீரழிக்கும் வரிச் சுமை என்ற தொனிப்பொருளில் கொழும்பில் சமீபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் கூறியிருந்தார்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியை பொறுப்பேற்கும்போது வெளிநட்டுக் கடன் தொகை இரண்டு ரில்லியன் ரூபாவாகவே காணப்பட்டதாக பந்துல குணவர்த்தன கூறியுள்ளார்.

ஆனால், 2014 ஆம் ஆண்டு ஏழு ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்தது. எனினும் மஹிந்தவின் ஆட்சியின் போது இலங்கையில் பல்வேறு பொருளாதார அபிவிருத்திகள் இடம்பெற்றதாக பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இதேவேளை, நிறுத்தப்பட்டுள்ள நிதியுதவிகளை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மீளப் பெறும் நோக்கில் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்குப் பயணம் செய்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமையாளர், நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் மங்கள சமரவீர பேச்சு நடத்துவார் என இலங்கை நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, திறைசேரி செயலாளர் உள்ளிட்ட நிதியமைச்சின் அதிகாரிகள் குழுவொன்றும், மங்கள சமரவீரவுடன் நேற்று முன்தினம் வெ்ள்ளிக்கிழமை வொசிங்டனுக்குப் பயணம் செய்துள்ளது.

அதேவேளை, இந்த ஆண்டு 5,90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டி செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

மிகவும் பாரிய கடன் தவணையாக இந்த மாதம் 14ஆம் திகதியன்று, 2,600 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தியே ஆகவேண்டும் எனவும் இது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய கடன் மீள் செலுத்துகை என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பெறப்பட்ட கடனை, பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் மீளச் செலுத்துவதற்கான திட்டமொன்றைத் தயாரித்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிபப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நடப்பு நிதியாண்டின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய சீனா உதவியளிக்கவுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

கொழும்பில் உள்ள சீனத் தூதுவருடன் அமைச்சர் மங்கள சமரவிர பேச்சு நடத்தியுள்ளதாக அமைச்சின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.