இலங்கையின் அரசியல் நெருக்கடிக்குப் பின்னரான நிலை

மகிந்தவை மையப்படுத்திய பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு- பசில் ராஜபக்ச

மைத்திரியே வேட்பாளர் என்கிறார் அமைச்சர் நிமல் - தயார் என்கிறார் கோட்டாபய ராஜபக்ச
பதிப்பு: 2019 ஜன. 14 10:44
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 14 21:42
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Political
#MahindaRajapaksha
#GotabajaRajapaksha
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே கூடுதல் சபைகளை கைப்பற்றியதாகவும் ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி மூன்றாவது இடத்தையே பெற்றிருந்ததாகவும் பசில் ராஜபக்ச கூறினார்.
 
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி போட்டியிட்டு வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியில் இருந்தே ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்றும் பசில் ராஜபக்ச கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் வேட்பாளர் யார் என்று அவர் எதுவும் கூறவில்லை. எனினும் அவருடையதும் மகிந்த ராஜபக்சவினதும் சகோதரரான கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான ஆவணங்களை கையளித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் கோட்டாபய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச அதனை மறுத்துள்ளார். கோட்டாபயவின் அமெரிக்கப் பயணம் தனிப்பட்டது. அதனை பகிரங்கப்படுத்த முடியாதெனவும் மலிந்த ராஜபக்ச கூறினார்.

மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூர்மைச் செய்தித் தளம் கடந்த ஆறு மாதங்களுக்க முன்னரே செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பில் செய்தியாளர்களிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இணங்க வேண்டும்.

இல்லையென்றால் மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தல்களை முதலில் நடத்த மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

2020 ஆண்டு ஓகஸ்ட் மாத்திற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது. ஆனால் அதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்றத்தில் சிறப்பு பிரேரணை ஒன்றை சமர்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோருவார் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன.