தமிழர் தாயகம் வடமாகாணம்

முல்லைத்தீவு - செம்மலைப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழாவைக் குழப்பிய பௌத்த பிக்குமார்

ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்படும் பௌத்த அமைப்பு மீது குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஜன. 14 21:12
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 14 22:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Tamil
#Thaipongal
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்படும் இலங்கையைப் பாதுகாப்போம் என்ற பௌத்த அமைப்பு ஒன்றைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர், முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலயப்பகுதியில் நடைபெறவிருந்த தைப்பொங்கல் விழாவை நடத்தவிடாமல் குழப்பம் விளைவித்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். தமிழர் தாயகமான வடமாகாணம் - முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை தைப்பொங்கல் விழா நடைபெறும் என ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை ஒன்றை அமைத்து வரும் பௌத்த பிக்கு ஒருவர், இலங்கையைப் பாதுகாப்போம் என்ற பௌத்த அமைப்பைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினருடன் சேர்ந்து இடையூறு விளைவித்ததாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த இலங்கை இராணுவத்தினரும் பௌத்த பிக்குமாருக்கு ஆதரவாகச் செயற்பட்டதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் பௌத்த பிக்குகளின் எதிர்ப்புக்களையும் மீறி பிரதேச மக்கள் பொங்கல் விழாவை நடத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பௌத்த பிக்குமாரின் எதிர்ப்புகள், இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பொங்கல் விழா நடைபெற்றபோதும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த மக்களையும் ஊடகவியலாளர்களையும் இலங்கை இராணுவத்தினர் வீடியோ பதிவும் செய்தனர். ஊடகவியலாளர்களோடு பௌத்த பிக்குமாரும் இராணுவத்தினரும் முரண்பட்டனர்.

எதிர்ப்புகள், தடைகளை மீறி இடம்பெற்ற இப்பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வட மாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பௌத்த பிக்குமாரும். இலங்கை இராணுவத்தினரும் இணைந்து பொங்கல் விழாவை நடத்தவிடாமல் தடுத்தமை குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு முறையிட்ட போதும் பயன் ஏதும் இல்லையென பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டனர்.