இலங்கைப் புலனாய்வுத் துறையுடன் பணியாற்றியதாக நீதிமன்றத்தில் பகிரங்கப்படுத்திய

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குமார் கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்

பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினமன்று விடுதலை செய்யப்படுவார் - துமிந்த
பதிப்பு: 2019 ஜன. 19 23:15
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 20 08:23
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஆறு வருடங்களில் அனுபவிக்கும் வகையில் 19 வருட சிறைத்தண்டனை விதிக்கபட்ட பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினமன்று விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குமார் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பௌத்த பிக்குமாரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞானசார தேரரை சுதந்திர தினம் அன்று விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் தேரா்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
 
இதேவேளை, நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினமன்று ஞானசார தேரா் விடுதலை செய்யப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வார் என அவர் கூறினார்.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஞானசார தேரரை நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க பார்வையிட்டார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட துமிந்த திஸாநாயக்கா, அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு பல தரப்பினரும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறினார்.

இதனால் சுதந்திர தினமன்று தேரரை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டுள்ளதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னொலிகொடவை ஹோமகம நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தை ஞானசார தேரா் அவமதித்திருந்தார்.

அதேவேளை, இலங்கைப் புலனாய்வுத் துறையுடன் இணைந்து போர்க்காலத்தில் பணியாற்றியதாகவும் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஞானசார தேரா் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.