வடமாகாணத்தின்

வவுனியா சிதம்பரநகர் கிராமத்தை ஆட்டிப்படைக்கும் சிறுநீரக நோய்த்தாக்கம் - கடந்த வருடத்தில் 10 பேர் பலி

காணிகள் வழங்கப்பட்டனவே தவிர வேறு எந்தவொரு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை
பதிப்பு: 2019 ஜன. 20 09:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 20 09:53
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Vavuniya
#Sithamparapuram
#Sithamparanagar
#WaterProblem
தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போர் காரணமாக இடம்பெயர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் இந்தியா உட்பட புலம்பெயர் நாடுகளிலும் தஞ்சமடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பி பல வருடங்கள் கடந்துள்ள போதும் குடிநீர்ப்பிரச்சனை உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை என வவுனியா சிதம்பரநகர் கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தற்காலிக முகாமாக காணப்பட்ட இந்தப் பிரதேசத்தில் தற்போது அங்கிருந்த மக்கள் நிரந்தரமாக குடியேற்றப்பட்டுள்ளனர்.
 
இருந்த போதிலும் மக்களுக்கு காணிகள் பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றதே தவிர மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்று சிதம்பரநகர் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் சிதம்பரநகர் மக்களது தற்போதைய நிலை குறித்து கூர்மை செய்தித் தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தற்காலிக நலன்புரி முகாமாக காணப்பட்ட சிதம்பரபுரம் கிராமத்தின் உருவாக்கம் பற்றிக் கூறுங்கள்?

இந்தக் கிராமம் கடந்த 1990 ஆம் ஆண்டு அகதிகளாக வந்து குடியேறிய மக்களால் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் உட்பட தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில் இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாங்கள் இடம்பெயர்ந்தோம்.

அவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் சென்று குடியேறினர். பின்னர் 90 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு இந்த இடத்தில் அகதி முகாம் அமைத்து குடியேற்றப்பட்டோம்.

அவ்வாறு குடியேறிய மக்கள் தற்காலிகமாக இங்கு வசித்து வந்த நிலையில் நாட்டில் தொடர்ந்து நிலவிய போர் காரணமாக சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாது இங்கேயே தங்கிவிட்டோம்.

இறுதிக்கட்ட இன அழிப்பு போர் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டின் பின்னரும் நாங்கள் இங்கு தொடர்ந்து முகாமில் வசித்து வந்ததுடன் தற்காலிகமாக வசித்து வந்த இந்தக் காணிகளை நிரந்தரமாக வழங்குமாறு வலியுறுத்தி பல தடவைகள் கோரிக்கை விடுத்ததுடன் பல போராட்டங்களையும் மேற்கொண்டோம்.

பின்னர் பலத்த போராட்டத்தை அடுத்து அரச காணிகளும் சிதம்பரநாதன் என்பவது தனியார் காணிகளும் எமக்கு வழங்கப்பட்டது.

அதுவரை சிதம்பரபுரம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பிரதேசம் தற்போது சிதம்பரநகர் என்று அழைக்கப்படுகின்றது.

தற்போது இங்கு வசிக்கும் மக்களது எண்ணிக்கை?

இங்கு மக்கள் குடியேறி 20 வருடங்கள் கடந்த விட்டன. தற்போது பரம்பரை பரம்பரையாக நாங்கள் இங்கு தான் குடியிருக்கின்றோம். தற்போது 198 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர்.

இதுவரை எவ்வாறான உதவித்திட்டங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன?

இந்தக் காணிகள் நிரந்தரமாக வழங்கப்பட்டனவே தவிர வேறு எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை. நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து அதில் வரும் பணத்தில் தான் எங்களுடைய காலத்தைக் கழிக்கின்றோம்.

இங்குள்ள அடிப்படைப் பிரச்சனைகள் யாவை?

இங்கிருக்கின்ற காணிகள் தவிர அனைத்துமே இங்கு பிரச்சனை தான். இதுவரை எங்களுக்கு இருப்பதற்கு ஒழுங்கான வீடுகள் இல்லை. தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடுகளில் தான் வாழ்கின்றோம். மழை காலங்களில் நாங்கள் பெரிதும் சிரமப்படுகின்றோம். களிமண்ணால் அமைக்கப்பட்ட இந்த வீடுகள் கடும் மழை பெய்தால் கரைந்துவிடும்.

அடுத்தது குடிநீர்ப்பிரச்சனை. சாதாரணமாக நீரைப் பெறுவதற்கே இங்கு பெரும் சிரமமாக உள்ளது. நான்கு அல்லது ஐந்து வீடுகளுக்கு ஒரு கிணறு தான் இருக்கின்றது. அதனை விட குடிநீர் என்பது பாரிய பிரச்சனையாக உள்ளது. இங்குள்ள நீரை அருந்துவதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதிகளவானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தது வீதிப் பிரச்சனை. பிரதான வீதி தவிர்ந்த ஏனைய உள்வீதிகள் இதுவரை செப்பனிடப்படவில்லை. மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனால் இந்தப் பாதைகளைப் பயன்படுத்த முடியாதுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர். மாணவர்கள் காலணிகளை அணிந்து செல்ல முடியாதுள்ளது. முதியவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வெளியில் செல்ல முடியாதுள்ளது. முதலில் எங்களுக்கு இந்த வீதியைப் புனரமைத்து தருவதற்கு உங்களது இந்தக் கூர்மை ஊடகத்தின் ஊடாக ஒரு வழியை ஏற்படுத்தித் தாருங்கள்.

இந்தக் கிராமத்தில் எத்தனை பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்?

இங்கு முதியவர்கள் இளைஞர்கள் சிறுவர்கள் என அனைத்து வயதுப்பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த வருடம் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது பலரும் இதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டுவருகின்றனர். சிறுவர்களையும் இந்த நோய் தாக்கியுள்ளமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வரும் எமது சந்ததி நோயாளர்களாகவே மாறிவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது.

இந்த நோயினால் கடுமையான வேலைகளைச் செய்ய முடியாதுள்ளது. இங்குள்ள ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவருமே கூலி வேலை செய்து சம்பாதிக்கின்றனர். இதற்காக கடுமையான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால் குடும்பத் தலைவர்களை இந்த நோய் தாக்கியுள்ளதனால் அவர்களால் தொழிலை மேற்கொள்ள முடியவில்லை. அதிக நேரம் வெயிலில் நின்று தொழில் செய்ய முடியவில்லை. ஆகையால் உரிய சம்பளம் கிடைக்கப்பெறாதால் குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.