2016 ஆம் ஆண்டு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாக கையாளத் தவறும் கிளிநொச்சி மாவட்ட செயலகம்- செய்தியை அடுத்து பதில்

மின்னஞ்சல் ஊடக முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு ஒன்றரை மாதத்தின் பின்னரே பதில் வழங்கப்பட்டது
பதிப்பு: 2019 பெப். 05 14:20
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 05 21:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#DistrictSecretariat
#RTI
#Srilanka
2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அரச திணைக்களங்கள் இதனை உரிய வகையில் கையாளத்தவறுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கூர்மையின் செய்தியாளர் முன்வைத்த விண்ணப்பத்துக்கு உரிய காலத்தில் பதில் வழங்கத் தவறிய கிளிநொச்சி மாவட்ட செயலகம், ஒன்றரை மாதத்தின் பின்னர் அதுவும் கூர்மைச் செய்தித் தளம் கண்டித்து வெளியிட்ட செய்தியின் பின்னரே உரிய பதிலை வழங்கியுள்ளது. குறித்த பதில் கடிதம் 2019.01.23 ஆம் திகதி அச்சிடப்பட்டு 2019.02.05 ஆம் திகதி அன்று, விண்ணப்பதாரியான கூர்மையின் செய்தியாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளின் அளவு தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கேள்வி ஒன்று விண்ணப்பிக்கப்பட்டது.

கூர்மைச் செய்தியாளர் விண்ணப்பித்து ஒரு மாதம் சென்ற நிலையிலும் அதற்கான உரிய பதில் வழங்கப்படவில்லை.

மேற்குறித்த விடயம் தொடர்பாக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக முதலாவது விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி குறித்த விண்ணப்பதாரி தொடர்பான தகவல்களை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலிருந்து மின்னஞ்சல் கிடைத்திருந்தது.

அதற்கமைய கூர்மைச் செய்தித் தளத்தின் சார்பில் விண்ணப்பித்த செய்தியாளர், அன்றைய தினமே தன்னுடன் தொடர்பு கொள்ளக்கூடியவாறான தகவல்களை வழங்கினார்.

ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித பதிலும் அனுப்பி வைக்கப்படவில்லை என கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி செய்தி ஒன்றை கூர்மைச் செய்தித் தளம் வெளியிட்டது.

அத்தோடு இது தொடர்பில் உரிய பதில் வழங்குமாறு மீண்டும் மின்னஞ்சல் ஊடாகவும் தகவல் அனுப்பப்பட்டது.

இதனையடுத்தே பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதியான இன்று ஒன்றரை மாதத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தால் பதில் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 14 வேலை நாட்களில் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு குறித்த விண்ணப்பத்தில் உள்ள கேள்விக்கு பதில் வழங்க முடியாதாயின் அதற்கான சரியான காரணத்தை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் குறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஏலவே அறிவுறுத்தியுமுள்ளது.

இதனால் பதில் வழங்கத் தாமதிப்பதற்கான காரணத்தைக் கோரி அனுப்பிய தகவலுக்கு பதிலளிக்கத் தவறிய கிளிநொச்சி மாவட்ட செயலகம், ஆரம்பத்தில் முன்வைத்த கேள்விக்கு தாமதித்து பதிலை வழங்கியமை கண்டனத்திற்குரியது என கூர்மைச் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக தகவலைக் கோரும் நபரின் சுய விபரங்களை சம்மந்தப்பட்ட அதிகாாிகள் கோர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.