இலங்கையின் தென்பகுதியில் புரட்சியில் ஈடுபட்ட

ஜே.வி.பியின் ஸ்தாபக உறுப்பினர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர அரசியலில் ஈடுபடவுள்ளார்

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கத் திட்டம்
பதிப்பு: 2019 பெப். 10 13:55
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 10 15:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக, 1971, 1987- 88 ஆம் ஆண்டுகளில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்ட ஜனதா விமுக்திப் பெரமுன என்று சிங்களத்தில் அழைக்கப்படும் ஜே.வி.பி யின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர அரசியலில் ஈடுபடவுள்ளார். அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான தற்போதைய ஜே.வி.பி ரோஹன விஜேவீரவின் குடும்பத்துடன் முரண்பட்டுள்ளது. இந்த நிலையில் உவிந்து விஜேவீர புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளையும், தனது தந்தையின் சோசலிசக் கொள்கையையும் பின்பற்றவுள்ளதாகக் கூறியுள்ளார். ரஷியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்ட உவிந்து விஜேவீர. சமீபத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.
 
கொழும்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக உவிந்து விஜேவீர விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் சோசலிச சமத்துவத்தை ஏற்படுத்த மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் இல்லை. ஆயுதப் புரட்சி தேவையில்லை. ஆனால் வர்த்தைகளினால் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்றும் உவிந்து விஜேவீர நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை, ஜே.வி.பியில் இருந்து பிரிந்த சிலர் குணரட்னம் தலைமையில் ஆரம்பித்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியில் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் இடம் பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் உவிந்து விஜேவீரவுடன் பேச்சு நடத்தியுள்ளதாக அந்தக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

1971, 1987- 88 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் தென்பகுதியில் தீவரமான ஆயுதப் புரட்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி, பின்னர் 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக அரசியலில் ஈடுபட்டது.

1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. போட்டியிட்டு, இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றது.

சந்திாிக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொஜன ஐக்கிய முன்னணிக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியது. நிஹால் கலபதி ஜே.வி.பியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யபட்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளராக பதவி வகித்த விமல் வீரவன்ச, ஜே.வி.பியில் இருந்து விலகி தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

அதன் பின்னா் 2010 ஆம் ஆண்டு. ஜே.வி.பியில் இருந்து மற்றுமொரு குழுவினர் வெளியேறி குணரட்னம் தலைமையில் முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கினர்.

அதேவேளை, 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஜே.வி.பி. ஈடுபட்டது.

முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்ற இறுதிப் போருக்கான முழு ஒத்துழைப்பையும் ஜே.வி.பி வழங்கியிருந்தது.

அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான தற்போதைய ஜே.வி.பி. ஈழத் தமிழர் விவகாரத்தில் நிர்வாக மட்டத்தில் அதிகாரங்களை பரவலாக்கம் செய்தால் போதும் என்றே கூறி வருகின்றது. அத்துடன் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் ஜே.வி.பி. நியாயப்படுத்தி வருகின்றது.

குணரட்னம் தலைமையிலான முன்னிலை சோசலிசக் கட்சியும் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினை குறித்த விடயங்களில் தெளிவான கொள்கையுடன் செயற்படவில்லை.

இந்த நிலையில் ரோஹன விஜேவீராவின் மகன் உவிந்து விஜேவீரவும் அரசியலில் ஈடுபடவுள்ளார்.

1989 ஆம் ஆண்டு கண்டி உலப்பனையில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில், அத்தநாயக்கா என்ற பெயரில் முகாமையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இலங்கைப் படையினரால் ரோஹன விஜேவீரா கைது செய்யப்பட்டார்.

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி கொழும்பு பொரள்ளைப் பிரதேசத்தில் வைத்துக் கொலை செய்ய்ப்பட்டதாக தற்போதைய ஜே.வி.பி கூறுகின்றது.

ஆனால் 1989 ஆம் ஆண்டு தனது கவணவர் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட தனது கவணர், பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரோஹன விஜேவீராவின் மனைவி ஸ்ரீமதி சித்திராங்கனி ஆட்கொனர்வு மனு ஒன்றை கடந்த ஆண்டு யூன் மாதம் 29 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சிறில் ரணதுங்க, முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் அமரர் ரஞ்சன் விஜேரத்ன, ஜெனரல் ஹமில்டன் வனசிங்க, ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ரோஹன விஜேவீர இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஜே.வி.பியின் மற்றுமொரு குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பிரேமதாச அரசாங்கமே அப்போது பதவியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.