வடமாகாணாம்

மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் குறித்த பரிசோதனை அறிக்கை விரைவில்

புளோரிடாவின் பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனை பூர்த்தி என்கிறார் சட்ட வைத்திய அதிகாரி
பதிப்பு: 2019 பெப். 11 16:26
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 11 16:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் மன்னார் நகர நுழை வாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனைக் கட்டட வளாகத்தில் கண்டறியப்பட்ட போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் தொடாபான காபன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியாகுமென எதிர்பார்ப்பதாக, அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனையை செய்து முடிப்பதற்காக இரண்டு வார அவகாசம் கோரப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி இந்த மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

தற்போது பரிசோதனை நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் ஆனாலும் அறிக்கை 14 ஆம் திகதிக்குப் பின்னரே வெளியாகலாம் என பீட்டா ஆய்வு கூடம் தெரிவித்ததாகவும் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

காபன் பரிசோதனை தொடர்பான அறிக்கையின் சான்றுகள் பற்றிய பிரதிகள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

பரிசோதனை அறிக்கையை பீட்டா ஆய்வுக் கூட இணையத்தளத்ததிற்குள் பிரவேசித்து பார்வையிடுவதற்கான அனுமதி தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே ஆய்வின் முடிவை இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் கூறிய சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ, அதிகாரபூர்வமாக மன்னார் நீதிமன்றத்திற்கு பரிசோதனை அறிக்கை அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முன்னூற்றிப் பதினைந்து மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 26 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் உட்பட 307 மனித எலும்புக் கூடுகள் குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனிதப் புதை குழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுடையது என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மனிதப் புதை குழி தொடர்பான இறுதி அறிக்கை வெளியானதும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி காத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.