பூகோள அரசியலின் தாக்கம்

இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதை இந்தியா விரும்புகிறது- பேராசிரியர் பீரிஸ் கூறுகிறார்

இந்த ஆண்டில் இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படும் என புதுடில்லி நம்புவதாகவும் சொல்கிறார்
பதிப்பு: 2019 பெப். 11 23:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 12 00:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதையே இந்திய மத்திய அரசு விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இந்த ஆண்டு இலங்கை அரசியலில் பெரியதொரு மாற்றம் நிகழும் என இந்தியா எதிர்ப்பார்க்கின்றது. மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையும் என இந்தியா நம்புவதாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை கைப்பற்றுவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கமல்ல. மாறாக பத்து ஆண்டுகளுக்கு இலங்கையில் ஆட்சி செய்யக்கூடிய அடித்தளக் கொள்கை ஒன்றை வகுப்பதே பிரதான இலக்கு என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.
 
மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வகுக்கவுள்ள புதிய அடித்தளக் கொள்கை தனியே தென்பகுதிக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல.

மாறாக வடக்கு- கிழக்கு மாகாணங்களையும் உள்ளடக்கியதாகவே அந்தக் கொள்கைத் திட்டம் உருவாக்கப்படும் என்றும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் பெங்களூர் நகரில் சமீபத்தில் நடைபெற்ற வருடாந்த மாநாடு ஒன்றில் மகிந்த ராஜபக்ச அதிதியாகக் கலந்துகொண்டார். இந்தியத் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய ஊடக முக்கியஸ்த்தர்கள், உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள், பேராசிரியர்கள் எனப் பெரும்பாலனோர் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இது மகிந்த ராஜபக்ச மீதான இந்தியாவின் ஆர்வத்தையே வெளிக்காட்டியுள்ளது என்றும் பேராசிரியர் பீரிஸ் கூறினார்.

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்த அமெரிக்கா இரகசிய நகர்வு என்றும் இந்தியா ஒத்துழைப்பதாகவும் கூர்மைச் செய்தித் தளத்தில் ஏலவே செய்திக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்தோ பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய பூகோள அரசியலில், அமெரிக்கா விரும்புவதையே இந்தியா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் கிழக்கு மாகாணம் திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிடம் இலங்கை அரசு கையளித்தது என்பதையும் கூர்மைச் செய்தித் தளம் ஏலவே வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படலாம் என அவரது மகன் நாமல் ராஜபகச இந்தியாவில் ஊடகம் ஒன்றுக்குக் கூறியிருந்தார்.

அதேவேளை, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக, கோட்டாபய ராஜபக்சவின் எலிய என்ற அமைப்புக்குச் சார்பாக செயற்படும் பௌத்த தேரர்கள் இந்த முயற்சியை ஆரம்பித்து்ள்ளதாகவும் மூத்த உறுப்பினர்களுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமி்க்கப்பட்டதன் பின்னணியிலும் இந்தியாவும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் செயற்பட்டிருந்ததாக கூர்மைச் செய்தித் தளத்தில் செய்திக் கட்டுரைகள் வெளியாகியிருந்தன.

மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியமைப்பதை இந்தியா விரும்புவதாக பேராசிரியர் பீரிஸ் வெளியிட்ட கருத்து, இலங்கையின் அரசியல் நெருக்கடியின் பின்னரான பூகோள அரசியலின் புதிய தாக்கம் என்றே கூறலாம்.