வடமாகாணம்

யாழ் நாயன்மார்க்கட்டில் உள்ள வீடொன்றில் முகமூடி நபர்கள் தாக்குதல்- பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை

வன்முறைக் குழுக்களை இலங்கைப் படையினர் இயக்குவதாகச் சந்தேகம்
பதிப்பு: 2019 பெப். 12 11:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 12 14:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டவேளை பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் உடனயாக சம்பவ இடத்திற்குச் செல்லவில்லையென பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனம் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.
 
வீட்டின் முன்பகத்தில் நிறுத்தியிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களும், வீட்டுக் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத முகமூடி நபர்களினால் தொடர்ச்சியாக பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் இலங்கைப் பொலிஸார் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதில்லையென பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

நாயன்மார்கட்டில் இடம்பெற்ற தாக்குதலில் வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனாலும் வீட்டின் மதிலால் ஏறி வளவுக்குள் பாய்ந்து வீட்டுக்குள் சென்ற முகமூடி நபர்கள் தாக்குதல் நடத்தியதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

வாள்வெட்டுக்குழுக்கள், மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் குழுக்கள் மீது பொலிஸார் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதில்லையென யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த வன்முறைக் குழுக்களின் பின்னணியில் இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இருப்பதாகவும் இலங்கைப் பொலிஸாரும் அதற்கு ஆதரவு என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.