கிழக்கு மாகாணத்தின்

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு - இன்று கடும் காற்று வீசும் என்பதால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

கடல் மீன்களுக்குத் தட்டுப்பாடு - மீனவக் குடும்பங்கள் பாதிப்பு
பதிப்பு: 2019 பெப். 13 09:13
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 13 09:19
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Batticaloa
#Seaturmoil
#Fishermen
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழில் நடவடிக்கைககள் முற்றாக சீர்குலைந்துள்ளதுடன் இன்றும் இந்த நிலை தொடரும் என்று மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் இன்று புதன்கிழமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றுடனான காலநிலை காணப்படும் எனவும் கடும் காற்று வீசும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், வடக்கு, வட மத்திய, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடுமையான கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்ப்பதுடன் கடற்றொழில் நடவடிக்கைககளில் அவதானமாக இருக்குமாறும் மாவட்ட வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைககளிலிருந்து முற்றாக விலகியுள்ளதால் மீனவர்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்லாததனால் கடல் மீன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவர்களும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.