இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னரான நிலையில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சந்திரிக்கா - சமகால அரசியல் பற்றி இருவரும் உரையாடினர்

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்து பேசப்பட்டதா?
பதிப்பு: 2019 பெப். 13 23:16
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 14 09:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#India
#ChandrikaKumaranathunga
#NarendraModi
#Political
இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியமைப்பார் என இந்தியா எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று புதன்கிழமை இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடியுள்ளார். புதுடில்லியில் உள்ள இந்தியப் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. ஆனால் சந்திப்பு நடைபெற்றதாக சந்திரிக்காவின் ஊடகத் தொடர்பாளர் கொழும்பில் கூறியுள்ளார்.
 
உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாடு-2019 என்ற நிகழ்வில் கலந்துகொள்ள சந்திரிக்கா புதுடில்லி சென்றிருந்தார். இந்த நிலையிலேயே நரேந்திர மோடியை இன்று சந்தித்து உரையாடியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெங்களூரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் பங்குபற்றியிருந்தார்.

இந்தியத் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய ஊடக முக்கியஸ்தர்கள், உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள், பேராசிரியர்கள் எனப் பெரும்பாலனோர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் பின்னர் அவர்களை மகிந்த ராஜபக்ச தனித்தனியாக சந்தித்து உரையாடியுமிருந்தார். இந்த நிலையிலேயே இலங்கையில் இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் நி்கழும் என இந்தியா எதிர்பார்ப்பதாக பேராசிாியர் பிரிஸ் சென்ற திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு கூறி இரண்டு நாட்களில் சந்திரிக்கா, இந்தியப் பிரதமர் மோடியை அதிகாரபூர்வமாகச் சந்தித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையில் திடீரென ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் நெருக்கடி தொடர்பாகவும் தற்போது மைத்திரி - ரணில் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் சந்திரிக்கா நரேந்திர மோடியுடன் பேசியதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றால் அதன் பின்னர் இலங்கையில் ஏற்படவுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்து சந்திரிக்கா விளக்கமளித்தார் என்றும் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தச் சந்திப்பு மரியாதையின் நிமித்தம் இடம்பெற்றதாகவும் வேறு எந்த அரசியல் விவகாரங்களும் அங்கு பேசப்படவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.