தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க காலத்தின் பின்னர்

தமிழீழ விடுதலை இயக்கம் பேரவையுடன் இணைந்திருந்தால் கூட்டமைப்பு இன்று இருந்திருக்காது - செல்வம் கருத்துக்கணிப்பு

புதிய கட்சிகளை உருவாக்குபவர்கள் கூட்டமைப்புக்கு எதிராகவே பேசுகின்றனர்
பதிப்பு: 2019 பெப். 15 09:41
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 15 09:48
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Mannar
#SelvamAdaikalanathan
#TNA
#TELO
சர்வதேசத்தின் துணையுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது செய்யப்பட்டதன் பின்னரான நிலையில், தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அடுத்த தலைமைப் பதவி யாருக்கு என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதுடன், இதற்காக பலரும் போட்டியிடுவதாக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மாறி மாறிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்திருந்தால் கூட்டமைப்பு இன்று இல்லாது போயிருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அணி மாநாடு மற்றும் இளைஞர் அணியின் நிர்வாகத் தெரிவு நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வரை தன்னகத்தே சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இதுவரை மூன்று கட்சிகள் தொடர்ந்தும் அங்கம் வகித்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய செல்வம், தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்திருக்க முடியும் எனினும் தமிழீழ விடுதலை இயக்கம் பேரவையுடன் இணைந்திருந்தால் தமிழ் தேசியக்கூட்டடைப்பு இன்றைக்கு இல்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் என்ற நிலையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரச்சினைகள் எழுந்தாலும், அதனைத் தக்க வைக்க வேண்டும் என்ற உணர்வோடு செயற்படுகின்ற கட்சியாக நாங்கள் செயற்படுகின்றோம்.

எமது மக்களின் சக்தியாக இன்றைக்கு விடுதலைப் புலிகளின் அமைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது. எங்களுடைய மக்களின் விடுதலை என்ற நோக்கத்திற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆகவே நாங்கள் அதன் ஊடாக பயணிக்க வேண்டும்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சுற்றி எத்தனை எதிரிகள். சிங்கள சக்திகள் எங்களுடைய எதிரிகள் என்று பார்த்தால் தமிழ்த் தரப்பும் எதிரிகளாகவே உள்ளது. தற்போது ஒவ்வொருவரும் கட்சிகளை ஆரம்பிக்கின்றார்கள்.

அவர்களின் பேச்சைப் பார்த்தால் தென்னிலங்கையை அவர்கள் தாக்குவது இல்லை. இராணுவத்தை தாக்கி கதைப்பது இல்லை. அரசாங்கத்தைப் பாரியளவில் விமர்சிப்பது இல்லை. ஆனால் அவர்கள் விமர்சனம் செய்கின்ற ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். ஆனால் நாங்கள் என்றைக்கும் விலை போனவர்கள் இல்லை.

ஆனால் இன்றைக்கு அதனைப் பலவீனப்படுத்துகின்ற வகையில் எங்களுக்குள் நாங்கள் பிளவுபட்டுள்ளோம். நான் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் கதைக்கின்ற விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது. எதிரிகளுக்கு வாய்ப்பையும் கொடுக்கின்றது.

அனாவசிய பேச்சுக்களைப் பேச வேண்டாம் என்று சம்மந்தப்பட்டவர்களிடம் கூறி வருகின்றோம். இந்த நாட்டிலே வாழுகின்ற ஒரு தமிழன் இந்த நாட்டிலே வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் எங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற போது தான், சுதந்திரத்தை அடைந்து விட்டேன் என்ற சந்தர்ப்பம் வருகின்ற போது தான் அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

ஆகவே, இந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்கின்றது. ஆகவே அந்த நாளை நான் சந்தோசமாக கொண்டாடுகின்றேன் என்ற சிந்தனை எப்போது அவனுக்கு எழுகின்றதோ, அப்போது தான் அதனைக் கொண்டாட முடியும் என செல்வம் அடைக்கலநாதன் தனது உரையின் போது குறிப்பிட்டுள்ளார்.