2009 ஆம் ஆண்டு்க்குப் பின்னரான சூழலில் தமிழ் மக்களை தொடர்ச்சியாக

இலங்கை அரசாங்கம் ஏமாற்றுகிறது - ஜெனீவா மனித உரிமைச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும், விக்னேஸ்வரன்

தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 பெப். 26 09:41
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 26 19:21
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#TamilGenocide
#Geneva
#HumanRights
#MissingPersons
#Kilinochchi
#Protest
#OMP
பொறுப்புக் கூறல் தொடர்பாக இதுவரை இலங்கை அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை கால அவகாசம் வழங்காது கடுமையான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர், முன்னாள் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதிலோ இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்டன. இதனால் தமிழ் மக்களின் மனங்களை புரிந்துகொண்டு ஜெனீவா மனித உரிமைச் சபை காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றுவது போன்று, ஜெனீவா மனித உரிமைச் சபையும் மக்களை ஏமாற்றக் கூடாது என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

அதேவேளை, இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த அலுவலகத்தில் நம்பிக்கை இல்லையென்றும் ஜெனீவா மனித உரிமைச் சபை தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப முற்பட்ட சில குழுக்கள் இலங்கை அரசாங்கத்தின் குறித்த அலுவலகத்தை திறக்க வேண்டும் என கோசம் எழுப்பினர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் அந்தக் குழுக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

குறிப்பிட்ட குழுக்கள் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய போராட்டம் தொடர்பான செய்திகளுக்கு கொழும்பில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.