வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில்

இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வாகனப் பேரணி - கொழும்பில் நிறைவடையும்

சிங்கள இடதுசாரி இயக்கங்கள், பொது அமைப்புகளுக்கும் அழைப்பு - ஏற்பாட்டாளர்கள்
பதிப்பு: 2019 பெப். 26 15:07
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 26 19:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Mullaituvu
#Keppapulavu
#Land
#Tamils
#Protest
தமிழர் தாயமான முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு பிரதேச மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருமாறு கோரி வாகனப் பேரணி போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் என்ற பெயரில் இந்த வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணிகளை மீட்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்று வரும் இடத்தில் இருந்து ஆரம்பமான இந்த வாகனப் பேரணி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து. மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. மகஜர் கையளிக்கப்படுவதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டமும் கையெழுத்து போராட்டமும் நடத்தப்பட்டது.
 
இந்த வாகனப் பேரணி, கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்தப்படும். பின்னர் மன்னாரை வந்தடையும்.

அதன் பின்னர் வவுனியா, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்கள் ஊடாகச் சென்று எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பில் நிறைவடையும். அன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு - கேப்பாபுலவு பிரதேசத்தில் ஆரம்பமான இந்த வாகனப் பேரணியில் கலந்துகொண்டவர்களை இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள், இலங்கைப் பொலிஸார் புகைப்படங்களை எடுத்து கண்காணித்ததாக போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டம் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்பது என்ற அடிப்படையில் தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

எதிர்வரும் 2 ஆம் திகதி கொழும்பில் நிறைவடையவுள்ள இந்தப் போராட்டத்தில் பங்குபற்றுமாறு சிங்கள இடதுசாரி இயக்கங்கள், பொது அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.