கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தின்போது செய்தி சேகரித்த

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் பாதுகாப்பு வழங்குமாறும் வலியுறுத்தி யாழ் ஊடக அமையம் அறிக்கை

குற்றவாளிகளை அடையாளப்படுத்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தயராக உள்ளதாக சுட்டிக்காட்டு
பதிப்பு: 2019 பெப். 26 20:42
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 26 21:14
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#JaffnaPressClub
#JPC
#Attack
#Journalist
#Protest
#MissingPersons
இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த காலத்தின் போதும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்போராலும், இலங்கை இராணுவத்தினராலும், புலனாய்வாளர்களாலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் படுகொலை செய்யப்படுதல் போன்ற அட்டூழியங்கள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சியில் நேற்றுத் திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியும் யாழ் ஊடக அமையம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த 2 வருங்களாக மேற்கொண்டுவந்த போராட்டத்தின் இரண்டு வருட நிறைவை முன்னிட்டு பாரிய கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது, அரசியல் கட்சி ஒன்றின் கறுப்பு சட்டை குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூர்மையின் கிளிநொச்சி செய்தியாளர் சுட்டிக்காட்டியிருந்ததுடன், இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

போராட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை குறித்த குழுவினர் எவரது அறிவித்தல்களுக்கும் கட்டுப்படாது அடாவடிகளில் ஈடுபட்டதாகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான தாய்மாரை முன்னே விட்டு பின்னால் அமைதியாக வருமாறு அருட்தந்தையர்கள் மன்றாட்டமாக கோரிய போதும் அவர்கள் அதனைக் கருத்தில் எடுக்கவில்லை எனவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியதற்கு அமைய, பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன் குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுயமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த குழுவினர் அவர்களை சீண்டும் வகையிலும், அவர்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் செயற்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதுடன் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி எச்சரிக்கை விடுத்ததாக சம்பவ இடத்திலிருந்த சக ஊடகவியலாளர்கள் உட்பட போராட்டத்தில் கலந்துகொண்டோர் இதனை உறுதிப்படுத்தினர்.

அத்துடன் போராட்டம் தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியில், கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பைச் சேர்ந்த கனகரஞ்சனி மற்றும் லீலாதேவி ஆகியோர் மக்களை வழிநடத்திச் சென்றதுடன் கோசங்களை எழுப்பியவாறும் இருந்தனர்.

இதன்போது, வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி(காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் – இலங்கை) வேண்டாம் எனக் கோசம் எழுப்பியபோது கரைச்சிப் பிரதேச சபையின் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சத்தியானந்தன் அதனைத் தடுத்து நிறுத்துமாறும், ஓ.எம்.பி வேண்டும் வேண்டும் என கோசம் எழுப்புமாறும் அறிவித்திருந்தார்.

எனினும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதனை ஏற்க மறுத்தபோது ஒலிபெருக்கியின் வயர்களை அறுக்கமுற்பட்டதாகவும், அறிவிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவன் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் ரெலோ கட்சியின் உறுப்பினர் மதுசுதன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூர்மை செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் எச்சரிக்கை சம்பவங்களிலிருந்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமைத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

அதிமேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி, இலங்கை குடியரசு.

மேன்மை தங்கிய ரணில் விக்கிரமசிங்க, பிரதமர், இலங்கை குடியரசு.

கௌரவ றுவான் விஜயவர்த்தன, வெகுஜன ஊடக அமைச்சர், இலங்கை குடியரசு.

கௌரவ இரா.சம்பந்தன், தலைவர்,தமிழ் தேசியக்கூட்டமைப்பு.

கௌரவ மாவை.சேனாதிராசா, தலைவர், தமிழரசுக்கட்சி.

பொலிஸ் மா அதிபர், இலங்கை குடியரசு.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்(வடபிராந்தியம்)

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.

யுத்த நெருக்கடி மிக்க காலப்பகுதிகளில் வட கிழக்கு தமிழர் தாயக்கப்பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஊடக அடக்குமுறைகளால் 39 வரையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை அறிந்ததே. அதனை விட பல மடங்கு ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டும் தப்பியோடியுமிருந்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னராக அச்சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட போதும், தற்போதைய சம்பவங்கள் அதன் உண்மைத்தன்மையினை கேள்விக்குள்ளாக்கியே வருகின்றது.

ஏற்கனவே முல்லைதீவில் ஊடகவியலாளர்களான ச.தவசீலன் மற்றும் எஸ்.குமணன் ஆகிய இருவரும் படையினரது பகிரங்க அச்சுறுத்தல்களிற்கு அண்மையில் உள்ளாகியிருந்தமை தொடர்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிளிநொச்சியில் கடந்த 25ம் திகதி திங்கட்கிழமை(25.02.2019) பகிரங்க வெளியில் ஊடகவியலாளர்களிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் மற்றும் அவர்களது பணியிற்கு விளைவிக்கப்பட்ட குந்தகம் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் மிகுந்த மனவருத்தத்துடன் தனது கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகின்றது.

தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரென அடையாளப்படுத்தப்பட்ட நபரொருவரும் அவருடன் வந்திருந்த கும்பலொன்றும் ஊடகவியலாளர்களிற்கு பொது வெளியில் அதுவும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் விடுத்த கொலை அச்சுறுத்தல் என்பது புறந்தள்ள முடியாததொன்று.

மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமொன்று தொடர்பில் அறிக்கையிட வருகை தந்திருந்த யாழ்ப்பாணம், முல்லைதீவு மற்றுமு் கிளிநொச்சி ஊடகவியலாளர்களிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஊடகவியலாளர்களை கிளிநொச்சியினை தாண்டி செல்ல முடியாதென கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளமையுடன் ஊடகவியலாளர்களை புகைப்படம் பிடித்து ஆவணப்படுத்தியுள்ளமை ஊடகவியலாளர்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அத்துடன் குறித்த கும்பலால் எடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை அக்கும்பலை சேர்ந்தவர்கள் தமது முகநுலில் பதிவேற்றி அடையாளம் காண உதவுமாறு பகிரங்கமான அறிவித்தலை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் அவ்வாறு புகைப்படம் பிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுவதும் தாக்கப்படுவதும் வழமையாக நடந்து வந்த சம்பவங்களே.

தற்போதைய சூழலில் கொலை அச்சறுத்தலையடுத்து தமது தொழில் நிமித்தமோ அல்லது தனிப்பட்ட தேவையின் நிமித்தமோ ஊடகவியலாளர்கள் கிளிநொச்சி செல்ல அச்சங்கொண்டுள்ளனர்.

கடந்த ஆட்சி காலங்களில் நடந்தது போன்று தாங்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோ அல்லது கொல்லப்படலாமென்றோ அச்சம் அவர்களிடையே எழுந்துள்ளது.

இன்னொரு புறம் வழமை போலவே ஊடகவியலாளர்களிற்கு அரசியல் சாயம் பூசும் நடவடிக்கைகளிலும் இத்தரப்புக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இத்தகைய சூழலில் ஊடகவியலாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் கோரி நிற்கின்றோம்.

இதன் மூலம் தமக்கு நீதி கோரி ஊடகவியலாளர்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியுமென நம்புகின்றோம். அதேவேளை குற்றவாளிகளை அடையாளப்படுத்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தயராக உள்ளார்கள் என்பதையும் அறியத்தர விரும்புகின்றோம்.

தலைவர் யாழ்.ஊடக அமையம்

செயலாளர், யாழ்.ஊடக அமையம் 26.02.2019

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அரசியல் அழுத்தங்களினால், ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி, ஊடகவியலாளர் அமைப்புகள் இலங்கைத் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி மகஜர் ஒன்றைக் கையளித்திருந்ததுடன் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிட வேண்டும் எனவும் ஊடக அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.