கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள

யாழ்.பல்கலைக்கழக தொழிநுட்பபீட மாணவர்களுக்குத் தடை- புதிய மாணவர்களுக்கு பகிடிவதை தீவிரம்

விசாரணைகள் நிறைவடையும் வரை மாணவர்கள் மீதான உள்நுழைவுத் தடை நீக்கப்படமாட்டாது என தகவல்
பதிப்பு: 2019 பெப். 27 10:31
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 27 10:55
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Ragging
#Kilinochchi
#UniversityofJaffna
#UOJ
#FacultyofTechnology
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழிநுட்ப பீடத்தில் பகிடிவதையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து தொழிநுட்பபீடத்தின் அனைத்து மாணவர்களும் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில்நுட்பபீட வளாகம் உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் உள்நுழைவதற்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தொழிநுட்ப பீடத்தின் புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தியதாகவும் இந்த விடயம் தொடர்பாக புதுமுக மாணவர்களின் பெற்றோர் பதற்றமடைந்து, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவத்தை அடுத்து உப விடுதிக் காப்பாளர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முனைந்தபோது, சிரேஷ்ட மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளால் உப விடுதிக் காப்பாளரை பேசியதுடன், சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த தொலைபேசியைப் பறித்துச் சென்றதுடன் விடுதியினுள் கலகத்தில் ஈடுபட்டார் என்றும் சக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்ததாக கிளிநொச்சி செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை பிரதிப் பதிவாளர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்தபோது, பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு எதிராக சிரேஷ்ட மாணவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நேற்று புதன்கிழமை மாலை தொடக்கம் தொழிநுட்பபீடத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் பீடத்திற்குள் உள்நுழையா வண்ணம் துணைவேந்தரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இதுவரை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இம்முறை பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை மாணவர்கள் மீதான உள்நுழைவுத் தடை நீக்கப்படமாட்டாது என பல்கலைக்கழக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.