இந்தியா - பாகிஸ்தான் மோதல்

பாகிஸ்தானுக்கான விமான சேவைகள் அனைத்தையும் இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவிப்பு
பதிப்பு: 2019 பெப். 28 09:28
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 28 20:43
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#India
#Pakistan
#War
#SrilankanAirlines
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து பாக்கிஸ்தானின் கராச்சி, லகூர் நகரங்களுக்கான விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சின் உத்தரவுக்கு இணங்க ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கடந்த சில நாட்களாக முரண்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலும் போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருதரப்பும், போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகார சபை, தமது நாட்டின் வான் பரப்பின் ஊடான விமானப் பயணங்களுக்கு அனுமதியும் மறுத்துள்ளது.
 
பாகிஸ்தான் விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே பாகிஸ்தானுக்கான அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

அதேவேளை, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளோடு இலங்கை அரசாங்கம் இராஜதந்திர உறவுகளைத் தொடர்ந்து பேணி வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன கூறியுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போர் நிலைமைகள் தொடர்பாக இலங்கை உட்பட புதுடில்லியில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு விளக்கமளித்துள்ளது.