வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மன்னார் மனித புதைகுழி முன் கண்டன ஆர்ப்பாட்டம் - ஐ.நாவுக்கான மகஜரும் கையளிப்பு

இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக்கூடாது எனக் கோரிக்கை
பதிப்பு: 2019 பெப். 28 22:40
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 28 23:04
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mannar
#Relations
#MissingPerson
#Protest
#UN
ஈழத்தில் நடத்தப்பட்ட இனஅழிப்பு போர் காலங்களில் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள தமது உறவுகள் தமக்கு மீள வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துவந்த சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இரண்டு வருடங்களைக் கடந்துள்ள போதிலும் இதுவரை எவ்வித பலனுமின்றிய நிலையில் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து இன்றைய தினம் மன்னாரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
 
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பமாகி ஊர்வலமாக மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதியை சென்றடைந்தது.

அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு முன் ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து ஊர்வலம் மன்னார் பொலிஸ் நிலைய வீதியின் ஊடாகச் சென்று மன்னார் மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

பின்னர் மாவட்ட செயலகத்திற்கு முன் ஒன்றுகூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய இந்தப் போராட்டத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உட்பட தென்பகுதியில் இருந்து அருட்சகோதரர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் கொடுக்க வேண்டாம், இலங்கை அரசாங்கத்தை நீதிப் பொறிமுறையில் இருந்து தப்ப வைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மன்னார் மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார், புதைத்தவர்கள் யார் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கண்டன போராட்டத்தின் நிறைவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திராவினால் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டதாக கூர்மையின் மன்னார் செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.