ஜெனீவா மனித உரிமைச் சபை கூடவுள்ள நிலையில்

இலங்கை அரசாங்கம் படையினர் தொடர்பான வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்தக் கடும் முயற்சி

வடக்கு கிழக்கில் அலுவலகங்களை அமைக்கவும் ஏற்பாடு
பதிப்பு: 2019 மார்ச் 01 10:32
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 01 10:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், பொறுப்புக் கூறும் விடயங்களில் அக்கறையுடன் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பாட்ட வழக்கு விசாரணைகள் போன்றவற்றை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக இலங்கையின் தலைநகர் கொழும்பில் 2008/ 09ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவை கைது செய்யமாட்டோம் என்று வாக்குறுதியளிக்க முடியாதென இலங்கைச் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் தயாரத்ன, பிரதம நீதியரசர் நலின் பெரேராவிடம் கூறியுள்ளார்.
 
இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்வதை தடுத்து உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொட உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன்போதே சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் தயாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதம நீதியர்சர் நலின் பெரேரா தலைமையில் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழு முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது.

அதேவேளை, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக விரைவில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் தயாரத்ன கூறியுள்ளார்.

அதேவேளை, தனிப்பட்ட காரணங்களுக்காக, அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதியரசர் பிரியந்த ஜெயவர்த்தன அறிவித்துள்ளார்.

போர்க்கால குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு படை அதிகாரிகளும் கைது செய்யப்படமாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.

இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்த காணாமல் போனோரைக் கண்டறியும் அலுவலகத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாலிய பீாிஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.