இந்தியா - பாகிஸ்தான் மோதல்

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் இலங்கையின் நிலைப்பாட்டை அறிந்துகொண்டார் - பாகிஸ்தான் மௌனம்

மைத்திரி, ரணில், மகிந்த ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து உரையாடல்
பதிப்பு: 2019 மார்ச் 03 08:53
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 04 00:24
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்தியா பாக்கிஸ்தான் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சு புதுடில்லியில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். நேற்று முன்னதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கமோ கொழும்பில் உள்ள இந்தித் தூதரகமோ அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆனால் சந்திப்பு இடம்பெற்றதாக தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
பாக்கிஸ்தான் அரசாங்கம் இந்தியாவுடன் வலிந்து மோதல்களை ஆரம்பித்துள்ளது என்றும் ஆனால் பாக்கிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக இந்தியா போரை ஆரம்பிக்கவில்லை என்றும் இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து விளக்களமளித்துள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அரசியல், பொருளாதார ரீதியில் பிரச்சினைக்ள் எதுவுமே இல்லை. ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதே இந்திய அரசின் நோக்கம் எனவும் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து கூறியுள்ளார்.

அதேவேளை, பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை குறித்தும் இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து கூறியதாக இலங்கை அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சந்திப்பில் பாக்கிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கேட்டு அறிந்து கொண்டதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

ஈழத் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 2009 ஆம் அழிப்பதற்கு இந்தியாவும் பாஸ்தானும் இராணுவ ஒத்துழைப்புகளை வழங்கியதாக இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே கூறியிருந்தது.

இந்த நிலையில் பாக்கிஸ்தானுடனான மோதலில் இலங்கையின் நிலைப்பாட்டை கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து அறிந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் இதுவரையும் கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதுவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையோ சந்தித்துப் பேசவில்லை.

பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் உள்ள வெளிநாட்டுத் தூதவர்களைக் கூட பாக்கிஸ்தான் அரசாங்கம் அழைத்து விளக்கமளிக்கவில்லையென உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.