நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம்- ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

மாகாண சபைத் தேர்தலுக்கும் ஏற்பாடுகள்
பதிப்பு: 2019 மார்ச் 04 23:29
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 04 23:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதங்களில் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நேரங்கள் போதியதாக இல்லை என்று மூத்த உறுப்பினர்களுடன் வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில கூடவுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்குரிய நிதி ஒதுக்கீட்டை தோற்றகடிக்க வேண்டும் எனவும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
ஆனால் அதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விரும்பவில்லை என்றும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, முக்கிய அமைச்சர்கள் இருவருக்கான நிதி ஒதுக்கீட்டையும் தோற்றகடிக்க கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆகவே இந்த விடயங்கள் தொடர்பாக நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசவுள்ளதாக கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாளை செவ்வாய்க்கிழமை ஐந்தாம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீர இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளர்.

அதேவேளை, மாகாணசபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து வருகின்றனர்.

முன்னர் நடைமுறையில் இருந்து விகிதாசார தேர்தல் முறைப்படி மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கேற்ற முறையில் கட்சி உறுப்பினர்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தொகுதி அமைப்பாளர்களிடம் கோரியுள்ளார்.