முரண்பாட்டில் உடன்பாடாக

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவார் - கண்டியில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு - மைத்திரி கைவிடப்பட்டார்
பதிப்பு: 2019 மார்ச் 05 10:54
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 05 22:31
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளாரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முரண்பாடுகள் நிலவி வந்தன. குறிப்பாக கூட்டமைப்பில் பிரதான கட்சியாக இருந்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முரண்பட்டிருந்தனர்.
 
இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் சில மாதங்களுக்கு முன்னர் இணைந்து கொண்டனர்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலை ஏற்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி 20016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டிருந்தது.

இவ்வாறாதொரு நிலையில் கோட்டாபய ராஜபக்சவும் அந்தக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார். இந்த நிலையில் முரண்பாடுகளிலும் ஓர் உடன்பாடாக கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்வரும் எட்டாம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் பேரணியின் பின்னர் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச மேடை ஏறவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்கு வைத்தே இந்தப் பேரணியும் பொதுக் கூட்டமும் கண்டியில் நடைபெறவுள்ளது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் வாசுதேவ நாணயக்கார குமார் வெல்கம ஆகியோரும் இந்தப் பேரணியில் கலந்துகொள்வர் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவிக்கமாட்டார் எனவும் ஆனாலும் கட்சியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணியின் முக்கியத்துவம் குறித்து அறிவிப்பார் எனவும் கூறப்படுகின்றது.

கோட்டாப ராஜபக்கவுக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. இதனால் அவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று தற்போதைக்கு பகிரங்கமாகக் கூற முடியாது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியானதும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து மகிந்த ராஜபக்ச மக்களுக்குக் கூறுவார் எனவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பகிரங்கமாக மேடை ஏறி அரசியல் பேசினால், வழக்கு விசாரணைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரப்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கக் கூடும் என்பதால், தற்போதைக்கு அரசியல் கூட்டங்களை கோட்டாபய தவிர்க்க விரும்புவதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் முழுமையாகத் தீர்க்கப்பட முன்னர் பொதுக் கூட்டங்களை தவிர்க்க விரும்புவதாகவும் கோட்டாபயவுக்கு ஆதரவான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன கூறிவந்தார். ஆனால் மகிந்த ராஜபக்ச தரப்பு இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டதாக மகிந்த தரப்பு தற்போது விளக்கமளித்தும் வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விலக்கிவிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மையப்படுத்தியதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மாற்றியமைக்கும் முயற்சியிலும் மகிந்த தரப்பு ஈடுபடுவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வான நிலையில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலை ஏற்படலாம் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கண்டிப் பேரணியையடுத்து எதிர்வரும் 26ஆம் திகதி அனுராதபுர சல்காடோ மைதானத்தில் மற்றொரு பாரிய பேரணி நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது.