ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட

பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கைப் படைகளைக் கௌரவிக்க இராணுவ வருடம் பிரகடனம்- மைத்திரி ஆலோசணை

ஜெனீ்வா மனித உரிமைச் சபையின் தீ்ர்மானங்களும் புறக்கணிப்பு
பதிப்பு: 2019 மார்ச் 05 23:48
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 06 00:24
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட இலங்கை அரசாங்கம் உரிய முறையில் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதாகத் தமிழ்தரப்பு குற்றம் சுமத்தி வரும் நிலையில், ஜெனீவா மனித உரிமைச் சபை மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஆகவே இவ்வாறான நிலையில் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்த பத்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை இரவணுவத்தை கௌரவிக்கும் நோக்கில் இராணுவ நினைவு வருடத்தை பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை இராணுவத்தை நினைவு கூரும் இராணுவ வருடம் பிரகடனப்படுத்தப்படும் என இலங்கை இராணுவ அதிகார சபைத் தலைவர் ஜம்மிக்க லியனகே தெரிவித்துள்ளார். இது இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் கூறினார்.
 
இராணுவ நினைவு வருடத்தை பிரகடனப்படுத்தும் நோக்கிலான இராணுவ கொடி இயக்கத்தின் முதலாவது கொடியை ஜம்மிக்க லியனகே இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அணிவித்தார்.

இந்த நிகழ்வின்போதே இரணுவ வருடம் பிரகடனப்படுத்தப்படவுள்ள தகவலை அவர் வெளியிட்டார். போரை வெற்றிகொண்ட இலங்கை இராணுவத்தை கௌரவித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் ஜம்மிக்க லியனகே கூறினார்.

போரின்போது கொல்லப்பட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்கள், காயமடைந்த, அங்கவீனமடைந்த இராணுவத்தினர் ஆகியோரை நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் இராணுவ நினைவு மாதங்களில், இலங்கை இராணுவத்திற்குரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில இராணுவ வருடத்தை பிரகடனப்படுத்தி இலங்கை இராணுவத்தின் ஆக்கத்திறனை வளர்க்க ஒவ்வொருவரும் ஊக்கமளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இடம்பெற்ற கொடி அணிவிக்கும் நிகழ்வில் கேட்டுள்ளார்.

போர்க்குற்ற விசாரணை அதற்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு ஜெனீவா மனித உரிமைச் சபை மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கவுள்ளதை மகிந்த ராஜபக்ச தரப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது.

இலங்கை இராணுவத்தையும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பையும் சர்வதேசத்துக்குக் காட்டிக் கொடுக்கும் செயல் என மகிந்த தரப்பு உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை மையமாகக் கொண்டு மைத்திரிபால சிறிசேன இலங்கை இராணுவ வருடத்தை பிரகடனப்படுத்தியதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டவுள்ளதை மைத்திரிபால சிறிசேன மகிழ்ச்சியானதாக எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன் ஜெனீவா மனித உரிமைச் சபையின் விதப்புரைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புறக்கணித்துமுள்ளார் என்பதையே இந்த இராணுவ வருட அறிவிப்பு எடுத்துக் காட்டுவதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாக மகிந்த தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படுவதை ஏற்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா கூறுகின்றார். ஆனால் அதே கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கால அவகாசம் வழங்கப்படுவதை வரவேற்றுள்ளார்.