தமிழர் தாயகத்தில்

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடி அகற்றலுக்கு நோர்வே 60 மில்லியன் குரோன் நிதியுதவி

மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகள் காணப்படுவதாக மக்கள் அச்சம்
பதிப்பு: 2019 மார்ச் 06 06:59
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 06 07:05
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#LandMines
#Srilanka
#War
#Norway
#NorthandEast
இலங்கையில் கடந்த தசாப்தங்களில் நிலவிய போர்க்காலங்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட காலப்பகுதிக்கு 60 மில்லியன் குரோன்களை வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வேயின் இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கொழும்பில் நடத்திய சந்திப்பின் போது இந்த விடயத்தைத் தெரிவித்ததாக கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.
 
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் தொண்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதமளவில், 94 சதவீதமான கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகள் மக்கள் பாவனைக்கு உகந்த பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நோர்வேயின் பங்களிப்பு கண்ணிவெடி அகற்றல் செயற்பாடு இடம்பெறும் பிரதேசத்தில் பணியாற்றும் அதிகார அமைப்புகளுக்கு முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல உதவியாக அமைந்திருக்குமென, நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் எரிக்சென் சொரிட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லெண்ண செயற்பாடுகளில் கண்ணிவெடி அகற்றல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.

இதனூடாக, போர்க் காலப்பகுதியில் பலவந்தமாக தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் தமது பிரதேசங்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக திரும்பக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும் என எரிக்சென் சொரிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தடை செய்யும் பிரகடனத்தின் பிரகாரம் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குவது நோர்வேயின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

எது எவ்வாறிருப்பினும் 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் கண்ணிவெடி முழுமையாக அகற்றப்பட்டதாக தொண்டு நிறுவனங்களால் உறுதியளிக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் காணப்படுவதுடன் இதனால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழக்கும் சம்பவமும் இடம்பெற்றுவருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.