இலங்கை நாடாளுமன்றத்தில்

நடப்பு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம் - கூட்டமைப்பு ஆதரவு

மகிந்த ராஜபக்ச அணியில் உள்ள ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் ஆகியோரும் ஆதரவாக வாக்களிப்பு
பதிப்பு: 2019 மார்ச் 12 22:12
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 12 22:44
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Budget
#Government
#Mangalasamaraweera
#Financeministry
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஜக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மகிந்த ராஜபக்ச தரப்பினால் தோற்கடிக்கப்படுமென்ற எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் 43 மேலதிக வாக்குகளினால் அது இன்று செவ்வாய்க்கிழமை மாலை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக76 வாக்குகளும் பெறப்பட்டன. அரசாங்கத் தரப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
 
மகிந்த ராஜபக்ச தரப்பின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜே.வி.பி.யின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தார்கள். இந்த வாக்களிப்பு கடுமையான கூச்சல்களுக்கு மத்தியிலேயே இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் பங்காளிக்கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை இன்னொரு பங்காளிக்கட்சியான ஈ.பி.டி.பி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதேவேளை எதிர்க்கட்சிப்பக்கத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பதினொரு உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை கூட்டமைப்பைச் சேர்ந்த சரவணபவன், ஸ்ரீநேசன்,செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய வியாழேந்திரன் எம்.பி எதிர்த்தே வாக்களித்தார்.

நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த ஐ்ந்தாம் ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆறாம் ஆம் திகதி முதல் ஆறு நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் இறுதி நாள் விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களுக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்து உரையாற்றினார். பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை 5.50க்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பில் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் பலமாக எழுந்த நிலையில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவுடனும் வழக்கத்துக்கு மாறாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவுடனும் எதிர்பாராத வகையில் 43 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றது.

இதேவேளை முப்பது உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை. ஆளும் தரப்பிலுள்ள ஐ.தே.க, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அடங்கலான கட்சிகளுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்த ஸ்ரீலங்கா சுாதந்திரக் கட்சி உறுப்பினர்களில் இருவரும் ஆதரவாக வாக்களித்தார்கள்.

நாளை 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை 19 நாட்கள் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் நடைபெறும்.

ஏப்ரல் 5 ஆம் திகதி மாலை ஐந்து மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.