எதிர்க்கட்சிகளின் மத்தியில்

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் இழுபறி - கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்தார் மகிந்த ராஜபக்ச

இம்முறை மூன்று பிரதான வேட்பாளர்கள் போட்டியிடும் சாத்தியம்
பதிப்பு: 2019 மார்ச் 14 10:34
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 17 22:50
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Presidentialelection
#Mahindarajapaksha
#UNP
#SLFP
#America
#Basilrajapaksha
இலங்கையில் ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பபடுகின்றது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன் மகிந்த ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, பசில் ராஜபக்ச கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
 
சந்திப்பில் முன்னாள் அமைச்சரும் முன்னணியின் தவிசாளருமான பேராசிரியர் பீரிஸ் கலந்துகொண்டாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், மகிந்த ராஜபக்ச என்ன விடயங்கள் குறித்துப் பேசினார் என்பது தொடர்பாக பசில் ராஜபக்ச கூறவில்லை.

இந்தச் சந்திப்பு எப்போது இடம்பெற்றது என்று பசில் ராஜபக்ச செய்தியாளர் மாநாட்டில் கூறவுமில்லை.

இலங்கையில் நாடாளுமன்றத் தோதல், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சர்வதேச நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னாவுமன் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடினார் என்றும் பசில் ராஜபக்ச கூறினார்.

கொழும்பில் உள்ள ஏனைய நாடுகளின் தூதுவர்களையும் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசவுள்ளார் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாட்டை வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு எடுத்துக் கூறுவார் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்தவர்கள் பலரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாத்திரமே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ச அறிவித்தால் அதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்ளும் என்று பசில் ராஜபக்ச கூறுகின்றார்.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே கடுமையான முரண்பாடு நிலவுகின்றது.

இதனால் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மகிந்த தரப்பில் இருந்து தனித்துப் போட்டியிடுவார் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டு ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார் எனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஏனைய சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி வேட்பாளரைக் களமிறக்கவுள்ளது.

ஆகவே ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை முக்கியமான மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எனவும் இதனால் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கே கூடுதல் வெற்றி வாய்ப்பு வரலாம் எனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஏனெனில், ஒரே கொள்கையுடைய மைத்திரி - மகிந்த ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சாதகமான நிலைமையை தோற்றுவிக்கலாம்.

ஆகவே இதன் பின்னணியை உணர்ந்து, மைத்திரி - மகிந்த ஆகிய இருவரும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் முரண்பாட்டிலும் உடன்பாட்டுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.