வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதம் நடைபெறும் வேளையில்

இலங்கைக்கு சீன எக்சிம் வங்கி 989 மில்லியன் டொலர் நிதியுதவி - உடன்படிக்கை கைச்சாத்து

மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு குறித்த நிதி செலவிடப்படும்
பதிப்பு: 2019 மார்ச் 22 23:21
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 23 09:42
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#China
#Srilanka
#EximBankofChina
#Budget2019
இலங்கை அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக சீனாவிடம் இருந்து நிதியைப் பெற்றுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 989 மில்லியன் டொலர் இலகு கடனை வழங்கும் உடன்பாட்டில் சீனாவும், இலங்கையும் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை நிதியமைச்சின் செயலாளர் சமரதுங்கவும், சீன எக்சிம் வங்கி சார்பில், இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவானும் கைச்சாத்திட்டனர். சீனாவின் எக்சிம் வங்கி இந்த நிதியுதவியை வழங்குகின்றது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டமான, கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்கு, 1.164 பில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
மொத்த செலவில் 85 வீத தொகைக்கான கடனை சீன எக்சிம் வங்கி வழங்கவுள்ளது.

சீனாவிடம் இருந்து மேலும் பல இலகு கடன் உதவித் திட்டங்களை இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதியமைச்சின் செயலாளர் சமரதுங்க தெரிவித்தார்.

கொழும்பு போட் சிற்றித் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவதாகவும் முக்கியமான திட்டங்கள் பூர்த்தியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சீனாவின் 60 கோடி நிதி உதவியுடன் இலங்கை முழுவதிலும் உள்ள 13 வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டிடங்களை நிர்மானித்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இலங்கைஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலைக் கட்டிடங்களுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கென மேலும் 60 கோடி நிதியும் இதனூடாக கிடைக்கவுள்ளதாக இலங்கைச் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஷல் காஷிம் தெரிவித்தார்.