தமிழர் தாயகத்தில்

அடிப்படைத் தேவைகளுக்கு போராட வேண்டிய நிலை - வீட்டுத்திட்ட நிதியை வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் எவ்வித பலனுமில்லை
பதிப்பு: 2019 மார்ச் 23 10:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 23 10:27
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Vavuniya
#Bharathipuram
#Housingscheme
#Protest
#Srilanka
#SLGovernment
தமிழர் தாயகப் பகுதிகளில் இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போரினால் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் வீட்டுத்திட்டம் வழங்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், வவுனியா - பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
 
வவுனியா – பாரதிபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 146 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்ததாகவும், தற்போது இந்த வீட்டுத்திட்டங்களுக்கான நிதி சீரான முறையில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்து, பாரதிபுரம் பலநோக்கு மண்டபத்துக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூர்மையின் வவுனியா செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த வருடம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு விடயங்களால் குறித்த வீட்டுத்திட்டத்துக்கான அடுத்த கட்ட நிதி இதுவரை வழங்கப்படாமையால், தமக்கு வழங்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க முடியாமல் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூர்மை செய்தித்தளத்திற்கு குறிப்பிட்டனர்.

அத்துடன், 2018 ஆம் ஆண்டு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் போது காணப்பட்ட மணல், சீமெந்து போன்ற கட்டடப் பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளதனால், ஐந்து இலட்சம் ரூபாவில் எவ்வாறு மிகுதி வேலைகளை முடிப்பது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளதுடன், தாம் தற்போது கடனாளிகளாகியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் போரின்போது அழித்தொழிக்கப்பட்ட கட்டங்கள் உட்பட பொது மக்களது வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், போர் இடம்பெற்ற பகுதிகளில் ஏற்பட்ட அழிவுகளை தாம் நிவர்த்தி செய்துள்ளதாகவும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட இன அழிப்பு போரை நிகழ்த்திய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சூளுரைத்திருந்தது.

இருந்தபோதிலும், 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் உட்பட காணிப்பிரச்சனை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, வீட்டுத்திட்டம் என எந்தவொரு பிரச்சனைகளும் இதுவரை முழுமையாக தீர்த்து வைக்கப்படாத நிலையில் தமது அடிப்படைத் தேவைகள் உட்பட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ் மக்கள் நாளாந்தம் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.