2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சிங்களக் கட்சிகளின் நகர்வுகள்

ஈழத் தமிழர் விவகாரத்தை இலங்கையின் உள்ளகப் பிரச்சினையாக மாற்ற சந்திரிக்கா வியூகம்

ரணிலுடன் இணைந்து செயற்படுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆலோசனை
பதிப்பு: 2019 மார்ச் 25 16:43
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 26 23:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரென மகிந்த ராஜபக்ச அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகிய நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்று சேர்ந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஈடுபடுவதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர் விவகாரத்தில் ஜெனீவா மனித உரிமைச் சபையைத் தாண்டி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பேசப்படக் கூடிய நிலைமை வரலாம் என்ற காரணத்தின் அடிப்படையில் சந்திரிக்கா, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்சவுக்கு அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுள்ளது.
 
ஆனால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து வேறொருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றால், இலங்கை விவகாரத்தில், டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்கு முன்னரான கொள்கையை அமெரிக்கா பின்பற்ற நேரிடலாம் எனவும் சந்திரிக்கா கருதியுள்ளதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரையே வெற்றி பெறச் செய்து, சர்வதேச அரங்கில், இலங்கை விவகாரத்தை உள்ளகப் பிரச்சினையாக மாற்ற சந்திரிக்கா திட்டமிட்டுள்ளதாக பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு நெருக்கமான கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இதனால், தேசிய அரசாங்கம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திரிக்கா ஆலோசித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சியோடு கூட்டுச் சேர்ந்து முன்னரைப் போன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படவே விரும்புகின்றார்.

ஆனாலும் கோட்டாபய ராஜபக்சவே நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் என்று மகிந்த ராஜபக்ச அறிவிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

எனினும் தன்னையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென மைத்திரிபால சிறிசேன இன்று வரை கோரி வருகின்றார். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில். மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திரிகா தொடர்பு கொண்டு பேச முற்பட்டபோதும். அதற்கு மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லையென கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு நிலையில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி தேசிய அரசாங்கமாக செயற்பட வேண்டும் என்ற ஆலோசனை ஒன்றை சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலருக்கு வழங்கியதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனிவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பத்துப் பேர், முதலில் ரணில் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவுள்ளனர்.

ஆனால் அதற்கு மைத்திரிபால சிறிசேன இணங்கவில்லை என்றும் எனினும் இந்தப் பத்துப் பேருக்கும் அமைச்சுப் பொறுப்புகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்குமாறும் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமர் என்ற முறையில் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாகவும், பெயர் விபரங்கள் விரைவில் அனுப்பப்படும் என்றும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும்போது அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள முடியும்.

ஆகவே இந்தப் பத்துப் பேரும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் மைத்திரிபால சிறிசேனவையும் தாண்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சந்திரிக்காவில் நம்பிக்கை வைத்து, ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவரென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரையே வெற்றி பெறச் செய்து, சர்வதேச அரங்கில், இலங்கை விவகாரத்தை உள்ளகப் பிரச்சினையாக மாற்ற சந்திரிக்கா திட்டமிட்டுள்ளதாக பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு நெருக்கமான கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர், எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்காவின் மகள். அத்துடன் கட்சியின் தலைவராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் ஆம் திகதி பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது. இதே மாதம் இதே திகதியில் 2016 ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்ச ஆரம்பித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை இரண்டாவது சிங்களத் தேசியக் கட்சியாக மாற்றியமைப்பதே இதன் நோக்கமென, சந்திரிக்கா தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தார்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டுச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 242 சபைகளைக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்பது சபைகளை மாத்திரமே கைப்பற்றியிருந்து. 42 சபைகளைக் கைப்பற்றி ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாம் இடத்தை பிடித்திருந்து.

இவ்வாறான நிலையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராக அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.