இலங்கை அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான

வரவு செலவுத் திட்டத்தை சுதந்திரக்கட்சி எதிர்க்காது - திலங்க சுமதிபால அறிவிப்பு

தேசிய அரசாங்கம் அமைக்கும் நோக்கம் தற்போதைக்கு இல்லையென்றும் தெரிவிப்பு
பதிப்பு: 2019 மார்ச் 26 23:24
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 26 23:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Budget
#Government
#Economy
#Maithripalasrisena
#Mahindarajapaksha
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து பயணிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றபோதும், தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஆனாலும் அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்காதெனவும் கட்சி உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து பேசப்படுகின்றது. ஆனால் அது குறித்து உறுதியாகக் கூற முடியாதெனவும் அவர் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
 
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, அதனை தோற்கடிக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறி வருகின்றது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு கூறிவரும் நிலையில், வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கும் நோக்கம் இல்லையென திலங்க சுமதிபால கூறியுள்ளார்.

அதேவேளை, கட்சியின் மூத்த உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி வருகின்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கப்போவதில்லை என்றும், மீண்டும் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு மாறானவையெனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.