வடமாகாணம்

மன்னாரில் மேலும் பல போர்க்கால மனிதப் புதைகுழிகள்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம்

இலங்கைக் கடற்படையின் சனிவிலேஜ் முகாமை அகற்றுமாறும் மக்கள் கோரிக்கை
பதிப்பு: 2019 மார்ச் 30 22:50
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 30 23:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகம் வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியென பிரகடனப்படுத்தப்பட்டு அப்பகுதிகளில் படைமுகாம்களாக காணப்பட்ட இடங்களில், மனிதப்புதை குழிகள் இருக்கலாம் என காணமல் போனவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இலங்கைக் கடற்படையின் சனிவிலேஜ் முகாமினுள் இவ்விதம் புதைகுழிகள் இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். மன்னாரில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை இதுவரை எண்ணூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் காணமல் போயுள்ளனர் என்று கூறியுள்ள காணமல் போனவர்களின் உறவினர்கள், இதனால் மனித புதைகுழிகள் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
 
தற்பொழுது மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் மற்றும் மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள சதோச வளாக மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் தாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

சனிவிலேஜ் கடற்படை தளத்திற்கு அருகாமையிலுள்ள பட்டித்தோட்டம், வலயக்காடு, கீரி, தாழ்வுப்பாடு, தோட்டக்காடு ஆகிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இலங்கைக் கடற்படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு கோரி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே மன்னார் மாவட்டத்தில் முன்பு இலங்கைப் படையினர் முகாமிட்டு இருந்த பகுதிகளிலும் தற்போது இலங்கைப் படையினர் தொடர்ச்சியாக முகாமிட்டுள்ள படைமுகாம்களிலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் எனும் தகவல்களை காணமல் போனவர்களின் உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் பட்டித்தோட்டம் எனும் பூர்வீக தமிழ் கிராமத்திற்கு அருகாமையிலுள்ள முந்திரி தோப்புகள், பனை, தென்னை, மாமரங்கள் மற்றும் தோட்டங்களும், துரவுகலும் அடங்கிய தமிழர் தாயகத்திற்கு சொந்தமான ஒரு பாரிய நிலப்பரப்பே சனிவிலேஜ் பகுதி ஆகும்.

இங்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பல விடுதிகள் 6 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இக்காணிக்கு அருகாமையில் பொதுமக்களுக்கு சொந்தமான தோட்டக் காணிகளும், குடிநிலக்காணிகளும் அமைந்துள்ளன.

இக்காணிகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்ட நிலையிலேயே இலங்கை பாதுகாப்பு படையினர் இப்பகுதியில் நிலைகொண்டு பாரிய படை முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரினால் பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் மன்னார் மாவட்டத்தில் இரு வெளியேறினர். மன்னார் மாவட்டத்திலுள்ள முஸ்லீம்கள் 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கடல்வழி மற்றும் தரைவழி மூலமாக இலங்கையின் தென்பகுதி மாவட்டங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

இத்தருணத்தில் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு நானாட்டான் பகுதி தமிழ் மக்கள் முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மடு பகுதியை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

மேலும்; இலங்கை இராணுவத்தின் தள்ளாடி முகாம் அருகாமையில் உள்ள வங்காலை கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் தமது கிராமத்தை விட்டு வெளியேறி மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள சனிவிலேஜ் பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.

1994ம் ஆண்டு குறித்த சனிவிலேஜ் பகுதியை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்ட நிலையில் அங்கு இடம்பெயர்ந்து வசித்த வங்காலை மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இச்சூழ்நிலையில் 1999 மற்றும் 2000ம் ஆண்டு காலப்பகுதிகளில் சனிவிலேஜ் பகுதியை பாரிய படை முகாமாக மாற்றியமைத்த இலங்கை இராணுவத்தினர் தமது மன்னார் நகரத்திற்கான கட்டளைத் தலைமையகமாகவும் குறித்த இராணுவ முகாமை பயன்படுத்தினர்.

இச்சூழ்நிலையில் சனிவிலேஜ் இராணுவ முகாமின் கட்டளை தளபதியாக கேப்டன் விஜயசிங்க எனும் இராணுவ அதிகாரி பணிபுரிந்த நிலையில் அச்சமயத்தில் மன்னார் நகரில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தார்கள்.

பின்னர் 2004ம் ஆண்டு காலப்பகுதியில் சனிவிலேஜ் பகுதியில் இருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் அங்கு இலங்கை கடற்படையினர் முகாமிட்டனர்.

அத்துடன் மிக பாரிய கடற்படை முகாமாக சனிவிலேஜ் பகுதியை மாற்றியமைத்த இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அங்கு நிலைகொண்டு வருகின்றனர். மேலும் குறித்த சனிவிலேஜ் முகாமிலுள்ள இலங்கை கடற்படையினர் அங்கு தொடர்ந்தும் நிரந்தரமாக நிலைகொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த முகாம் அமைந்துள்ள பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை பொதுமக்கள் தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் சனிவிலேஜ் கடற்படை தளத்திற்கு அருகாமையிலுள்ள பட்டித்தோட்டம், வலயக்காடு, கீரி, தாழ்வுப்பாடு மற்றும் தோட்டக்காடு ஆகிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடற்படையினரை அங்கிருந்து வெளியேறுமாறும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன் தாம் தொடர்ந்து அங்கு நிலை கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

யுத்த காலப்பகுதியில் காணமல் போனவர்கள் பலர் சனிவிலேஜ் கடற்படை முகாமில் படுகொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டிருக்கலாம். இதனால் புதைகுழிகள் தொடர்பான மர்மங்கள் வெளிவந்துவிடும் என்ற சந்தேகத்தில் மறுப்பு தெரிவிப்பதாக காணமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.