வடமாகாணம்

மன்னாரில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 28 வருடங்களுக்கும் மேலாக இழப்பீடுகள் வழங்கவில்லையென முறைப்பாடு

புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு அக்கறையின்றிச் செயற்படுவதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 மார்ச் 31 14:34
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 02 13:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mannar
#Srilanka
#Lastwar
#TamilGenocide
#Relief
#Tamils
தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு இதுவரையும் இலங்கை அரசாங்கத்தினால் உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தினால் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சும் நஷ்டஈடுகளை வழங்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் மன்னார் மக்கள் கூறுகின்றனர். 1984ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை மன்னார் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இலங்கை இராணுவம் நடத்திய முப்பதுக்கும் அதிகமான இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள் மற்றும் முற்றுகைச் சமர்களின் போது ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் இருநூறுக்கும் அதிகமானவர்கள் தமது அவயவங்களை இழந்து நிரந்தர அங்கவீனர்களாகியுள்ளனர்.
 
தொடர்ச்சியாக இழப்புக்களை எதிர்நோக்கிய ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் பத்து வருடங்கள் சென்றுவிட்ட பின்னரும் நஷ்டஈட்டு கொடுப்பனவுகளுக்கு காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக பலர் 28 வருடங்களுக்கும் மேலாக தமது நஷ்டஈட்டு கொடுப்பனவுகளுக்கு காத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

போர் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மன்னார் மாவட்ட மக்கள், குறித்த பாதிப்புகளுக்குரிய நஷ்டஈடுகளை வழங்குமாறு கோரி புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சுக்கு உட்பட்ட அதிகார சபைகளுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் கொழும்பில் இருந்து நிதி கிடைக்கவில்லையென அதிகாரிகள் மக்களிடம் கூறியுள்ளனர். இதனால் மன்னார் மாவட்ட மக்களின் நஷ்டஈட்டு கொடுப்பனவு தொடர்பாக இலங்கை அரசாங்கமும் அதன் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சும் அக்கறையின்றிச் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.