வடமாகாணம்

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் கார்பன் அறிக்கை தொடர்பான சந்தேகங்கள்

இறுதியான ஆய்வு எனக் கூற முடியாதென்கிறார் விக்னேஸ்வரன் - மறுக்கிறார் உதய கம்பன்பில
பதிப்பு: 2019 ஏப். 01 10:08
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 02 13:20
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mannar
#Massgrave
#Vickneswaran
#UdayaGammanpila
#TamilGenocide
#Srilanka
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், சந்தேகங்கள் வெளிவரும் நிலையில், விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் 1499 ஆம் ஆண்டுக்கும் 1719 ஆண்டுக்கும் இடைப்பட்டதென கார்பன் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டவை அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
 
ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சிலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறனதொரு நிலையில் மன்னார் புதைகுழி விவகாரம் குறித்துச் சந்தேகம் வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மீதும் காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தமிழ் இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காகவே சுமந்திரன் ஜெனீவா சென்றிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் கார்பன் அறிக்கை இறுதியானதெனக் கூற முடியாதென்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காபன் அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை ஏற்க முடியாதென மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் உதய கம்பன்பில கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கை இராணுவம் மீது குற்றம் சுமத்துவதே விக்னேஸ்வரனின் நோக்கம் என்றும் ஆனால், கார்பன் அறிக்கையில் உண்மை வெளியாகிவிட்டதாகவும் உதய கம்பன்பில கூறியுள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டவை என்றும் வேறு எலும்புக்கூடுகள் எதுவும் அனுப்பப்படவில்லையெனவும் கொழும்பில் இயங்கும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோரைக் கண்டறியும் அலுவலகத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

ஆனல் இதுவரையும் கார்பன் அறிக்கை தொடர்பாக குறித்த அலுவலகம் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.