போர்க்குற்ற விசாரணை நடந்துவிடுமென்ற அச்சத்தினால்

ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து விளக்கம் கோருமாறு மகிந்த தரப்பு அழுத்தம் - மைத்திரியும் இணக்கம்

ஆனால் அவசியம் இல்லையென்கிறது ரணில் அரசாங்கம்
பதிப்பு: 2019 ஏப். 02 15:12
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 03 09:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Warcrime
#Geneva
#Lastwar
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், மகிந்த ராஜபக்ச தரப்பும் இணை அனுசரணை வழங்கியமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்ட ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ அசீசை, கொழும்புக்கு அழைத்து விளக்கம் கோர வேண்டுமெனவும் மகிந்த ராஜபக்ச தரப்பு வலியுறுத்தி வருகின்றது. ஆனால் கொழும்புக்கு அழைத்து விளக்கம் கோர வேண்டிய அவசியம் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கூறி வருகின்றது.
 
இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை விளக்கமளித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே அசிஸ் கையெப்பமிட்டதாகக் கூறியுள்ளார்.

ஜெனீவாவுக்குச் சென்றிருந்த அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின் அரசின் உயர் அதிகாரிகளும் அதனை அறிந்திருந்தாகவும் இரகசியமாக எதுவுமே இடம்பெறவில்லையென்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கைப் பிரதமரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ தித்தவெல, ஜெனீவா தீர்மானத்துக்கான இணை அனுசரணை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.

அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு அமைவாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகம், 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்றும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயங்கள் தொடர்பாகவும் இணை அனுசரணை வழங்கப்பட்ட விவகாரம் குறித்தும் தனக்கு எதுவுமே தெரியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூற முடியாதெனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

30/1 தீா்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க அலுவலகம் ஒன்றை கொழும்பில் அமைக்க வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபை கோரியிருந்து.

எனினும் அது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை உரிய பதில் வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.