2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில்

ரணில் விக்கிரமசிங்கவினால் ஏமாற்றப்படுவதை சொல்வதற்கு வெட்கப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

இலங்கை அரசின் சிங்கள உயரதிகாரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியும் அவலம்
பதிப்பு: 2019 ஏப். 02 16:16
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 03 09:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Colombo
#TNA
#Ranilwickramasinghe
#IRoad
#Gamperaliya
ஈழத் தமிழர் விவகாரத்தில் நிரந்த அரசியல் தீர்வுகள் பற்றிய எந்தவொரு பேச்சுக்களையும் ஆரம்பிக்காமல் வெறுமனே அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளில் ஏமாற்றமடைந்துள்ளது. ஆனால் ஏமாற்றமடைந்து வருவதைக் கூட மக்களுக்கு வெளிப்படையாகக் கூற வெட்கப்படுவதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்திச் செயலணிக் கூட்டம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை நடைபெற்றபோது சிறிது நேரம் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மாத்திரமே கூட்டத்தில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
 
அதிலும் திருப்திகரமான முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பினர் சிறிதரன் ஆத்திரமடைந்த நிலையில் இடைநடுவில் வெளியேறிவிட்டார்.

கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவோடு முரண்பட வேண்டாமென கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் ஏனைய உறுப்பினர்களுக்கு, கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே அறிவுறுத்தியிருந்ததாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள மொழியில் கம்பரெலிய எனப்படும் ஊர் எழுச்சித் திட்டம் தொடர்பாகவும், ஐ ரோட் திட்டம் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. ஆனால் ஐ ரோட் திட்டங்கள் மே மாதம் அல்லது ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படுமென ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

எனினும் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தத் திட்டம் இழுத்தடிக்கப்படுவதாக கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியது. ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க உரிய பதில் கூறவில்லை.

(ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் கடந்த ஆட்சிக் காலத்தின்போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டமே (Integrated Road Investment Programme) எனப்படும் ஐ ரோட் (I Road) வேலைத் திட்டமாகும்.)

அதேவேளை, இலங்கைப் படையினர் அபகரித்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையளிப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எதுவுமே கூற விரும்பவில்லையெனவும் இதனால் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் அவர் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கூட்டத்தில் பேசப்பட்ட விபரங்கள் எதனையும் ஊடகங்களுக்கு அதிகாரபூர்வமாகக் கூறவிரும்பவில்லை.

நடந்த விடயங்களை தமிழரசுக் கட்சி மூடி மறைப்பதாகவே சில உறுப்பினர்கள் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறி ஆதங்கப்பட்டனர்.

ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாகவே ஏமாற்றுகிறாரென சிறிதரன் தனக்கு நெருக்கமான செய்தியாளர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும் ரணில் விக்கிரமசிங்க மீது அதிருப்தியடைந்திருந்தார். ஆனாலும் அதனை வெளிப்படுத்த அவர் விரும்பவில்லையென்று கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணம் பலாலி விமானத் தளத்துக்கு காணிகளை மேலும் கையகப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் பேசியுள்ளனர். ஆனால் அதற்கு மாவை சேனாதிராஜா எதிர்ப்பு வெளியிட்டார்.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்தால் மேலும் அபிவிருத்திகளை செய்ய முடியாதென சிங்கள உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் மாவை சேனாதிராஜா மேலதிக விடயங்களை உரையாட விரும்பவில்லையென்றும் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறியதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ரணில் அரசாங்கத்தின் இவ்வாறான அச்சுறுத்தல், ஏமாற்று வேலைகளைத் தெரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் மூடிமறைத்து ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்றுவதாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவோடு முரண்பட வேண்டாமென கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் ஏனைய உறுப்பினர்களுக்கு, கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே அறிவுறுத்தியிருந்தாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற நோக்கில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் அச்சுறுத்தல்களை சகித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களுக்கும் கம்பரெலிய எனப்படும் ஊர் எழுச்சித் திட்டத்தின் மூலமாக தலா நானூறு மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தார்.