இலங்கையின்

அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இராணுவத் தளம் இலங்கைக்குரியது என்கிறார் ரணில்

இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் கொழும்புக்கு வருகைதந்துள்ள நிலையில் இவ்வாறு அறிவிப்பு
பதிப்பு: 2019 ஏப். 08 11:24
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 08 21:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#India
#Srilanka
#China
#Hambantota
#Ranilwickramasinghe
#SanjayMitra
இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை பலரும் சீன அரசின் இராணுவத் தளம் என்று கருதுகின்றனர். ஆனால் எந்தவொரு நாட்டிற்கும் அம்பாந்தோட்டையில் இராணுவத் தளம் அமைக்க இடமளிக்க முடியாதென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது அமர்வில் உரையாற்றும்போது இவ்வாறு கூறிய ரணில் விக்கிரமசிங்க, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கையிடமே இருக்குமெனவும் குறிப்பிட்டார். அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இராணுவத் தளம் இலங்கைக்குரியது எனவும் இலங்கைப் படையினரின் தேவைக்காகவே அங்கு இராணுவத் தளம் அமைக்கப்படவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
 
அமைக்கப்படவுள்ள இராணுவப்படைத் தளத்திற்கு இலங்கைக் கடற்படையின் றியர் அட்மிரல் ஒருவர் பொறுப்பாகச் செயற்படுவார் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

உலகின் எந்தவொரு நாடுகளின் கப்பல்களும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வந்து செல்ல முடியும். சகல நாடுகளோடும் இலங்கை சுமுகமான உறவுகளைப் பேணும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ஆனாலும் சீன அரசுடன் முதலாவது வர்த்தக உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் செய்தது. அந்த வர்த்தக உடன்படிக்கை மூலம் இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்களை சீன அரசு மேற்கொண்டு வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

பூகோள அரசியல் போட்டிகளுக்குள் இலங்கை சிக்கிக்கொள்ளாது என்றும் கூறிய ரணில் விக்கிரமசிங்க, இந்தியா, வரலாற்று ரீதியாக நட்பு நாடு என்றும் அமெரிக்காவை விட இந்திய அரசிற்கே இலங்கை முக்கிய இடம்கொடுக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை, இந்திய நாடுகளுக்கிடையே ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பாதுகாப்பு விவாதத்தில் கலந்துகொள்வதற்காகவே இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பது குறித்துப் பேசவுள்ளதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, இந்தியப் பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா கொழும்புக்கு வருகை தந்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் செயற்பாடுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்குமெனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.