கொழும்பில் நடைபெற்ற

இலங்கை ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வை ஊடக அமைப்புகள் புறக்கணிப்பு

நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற பத்திரிகை ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களும் இறுதிநேரத்தில் வெளிநடப்பு
பதிப்பு: 2019 ஏப். 10 23:33
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 11 00:11
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வை சுதந்திரந்திர ஊடக இயக்கம். உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உள்ளிட்ட ஐந்து ஊடக அமைப்புகள் புறக்கணித்துள்ளன. இன்று புதன்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அழைப்பை ஊடக அமைப்புகள் நிராகரித்துள்ளன. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்குப் பின்னரான அரசியல் சூழலிலும் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக இதுவரை சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை. இலங்கைப் பொலிஸ் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதியளித்திருந்தார்.
 
ஆனால் இதுவரை எந்த ஆணைக்குழுவும் அமைக்கப்படவில்லை. குற்றவாளிகளில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவுமில்லை என்று ஊடக அமைப்புகளின் சார்ப்பில் சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டி்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை ஊடக அமைப்புகளின் புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளாமல் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்த இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இறுதி நேரத்தில் நிகழ்வில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்த பத்திரிகை ஆசிரியர்களை நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தின் வெளியில் உள்ள களரியில் அமருமாறு ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பத்திரிகை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் பத்திரிகை ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கோரியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.