இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

கட்சிகளிடையே இணக்கப்பாடுகள் இல்லாத நிலையில் குழப்பங்கள் முரண்பாடுகள் அதிகரிப்பு

ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கான சாத்தியங்கள்
பதிப்பு: 2019 ஏப். 11 22:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 02 21:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கான அரசியல் வேலைத் திட்டங்களில் இலங்கைப் பிதரமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மூலமாகவே ரணில் விக்கிரமசிங்க அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச் செய்தாலும் அவர் இலங்கைக் குடியுரிமையை மாத்திரமே கொண்டுள்ளார் என்பதை இலங்கை உள்நாட்டு அலுவலகள் அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்.
 
எனவே கோட்டாபயவின் குடியுரிமையை ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை தாமதப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்படுவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதனடிப்படையில் சரத்பொன்சேகாவுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றை வழங்கவுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு இணக்கம் தெரிவிப்பார இல்லையா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, வடக்கு கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளின் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இந்த நிலையில். ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு யூன் மாதம் வரை பிற்போட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளன.

2016 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகலாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் ஒரு ஆண்டுகாலத்திற்கு தனது பதவிக்காலத்தை நீடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.

மைத்திபால சிறிசேன தனது பதவிக்காலத்தை மேலும் நீடிக்க முடியாதென்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்றக வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து மைத்திரிபால சிறிசேன சட்டவியாக்கியானம் கோரவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்றுப் புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வாறு முடிவு எடுத்தால் அவருடைய பதவி நீடிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

இதேவேளை, ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் கூறியுள்ளன. மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவதற்கான காலம் தாமதித்து விட்டதாகவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டுமெனவும், ஆனால் அது தற்போதைக்கு சாத்தியப்படக் கூடியதல்ல என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.