தமிழர் தாயகம் வடமாகாணம்

யாழ்ப்பாணம் குப்பிளானில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி- கடும் வெப்பத்தின் பின்னர் மழை

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறையில் வெப்பம் தொடருமென அறிவிப்பு
பதிப்பு: 2019 ஏப். 16 17:18
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 16 18:01
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணத்தில் நீண்டால வரட்சியின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடும் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இன்று பிற்பகல் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் யாழ் நகரில் இருந்து பத்துக் கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சுன்னாகம் குப்பிளான் தெற்கு மயிலங்காடு பிரதேசத்தில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதாக உறவினர்கள் கூறுகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 48 வயதுடைய திருநாவுக்கரசு கண்ணன், 52 வயதான கந்தசாமி மைனாவதி 38 வயதான ரவிக்குமார் சுதா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
 
புகையிலைத் தோட்டத்தில் நான்கு பேர் வேலை செய்தனர். அவர்களில் ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்குச் சென்றிருந்தார். ஏனைய மூன்றுபேரும் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அச்சமயம் தடீரென கடும் மழை பெய்துள்ளது. இதனால் அருகில் தென்னைமரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் மூன்று பேரும் ஒதுங்கினர்.

அப்போது திடீரெனத் தாக்கிய மின்னல் தென்னைமரத்தின் அடியில் விழுந்தது. இதனால் கொட்டிலில் இருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதிய உணவு எடுக்கச் சென்றிருந்தவர், மழை ஓய்ந்ததும் உணவுப் பொதிகளுடன் தோட்டத்திற்கு வந்தபோது மூவரும் மின்னல் தாக்கி கொட்டிலுக்குள் வீழ்ந்து கிடந்ததைக் கண்டுள்ளார்.

அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், வடமேல் ஆகிய மாகாணங்களிலேயே இடியுடன் கூடிய மழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது.

இதேவேளை வட மத்திய மாகாணத்திலும், வடமாகாணம் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிழக்கு மாகாணம் திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை தொடருமெனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.