இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள்- ஜனாதிபதி வேட்பாளர் ரணில் என்கிறார் ரவி ஆனால் சஜித் விசனம்

கருத்து மோதல்களுக்கு மைத்திரியே காரணமெனவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஏப். 16 23:36
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 16 23:52
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலினால் பிரதான அரசியல் கட்சிகளிடையே நாளுக்கு நாள் மோதல்கள், முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமெனவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாஸ ஆகிய இருவருக்குதிடையில் கருத்து முரண்பாடு அதிகரித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்படுவார்.
 
ஆனால் தந்தையின் பெயரை வைத்து அரசியல் செய்வோர் ஜனாதிபதி வேட்பாளராக முடியாதெனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்கா கூறியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க இருக்கும்போது கட்சியின் தலைமைப் பதவிக்கு எவரும் முயற்சிக்கக் கூடாதெனவும் ரவி கருணாநாயக்க மட்டக்களப்பில் நேற்றுத் திங்கட்கிழமை கூறியிருந்தார்.

அதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அம்பாந்தோட்டையில் வைத்துப் பதிலளித்திருந்த அமைச்சர் சஜித் பிரேமதாசா, அப்பாவை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால் வங்கியில் கொள்ளையிட்ட பணத்தை வைத்து அரசியலில் ஈடுபடக்கூடாது என்றார்.

இரு அமைச்சர்களிடையேயும் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலும் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் லாபத்துக்காக சஜித் பிரேமதாசாவை பிரதமராக்க முயற்சிக்கிறார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவு படுத்துவதே ஜனாதிபதியின் பிரதான நோக்கமென்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவு படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவை அதிகரிக்க மகிந்த ராஜபக்ச தரப்பும் முற்படுவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குமிடையே ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் முரண்பாடுகள் நீடித்துச் செல்லுகின்றன.