கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பைச் சேர்ந்த பத்துப்பேர் விபத்தில் பலி- இருவர் ஆபத்தான நிலையில்- மஹியங்கனையில் சம்பவம்

இரட்டைக் குழந்தைகள் உட்பட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தோரே உயிரிழந்தனர்
பதிப்பு: 2019 ஏப். 17 15:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 17 21:42
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குச் சென்றுவிட்டு அம்பாறையில் உறவினர்கள் சிலரின் வீட்டுகளுக்குச் சென்று கொண்டிருந்தபோது பதுளை, மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பத்துப்பேர் உயிரிழந்துள்ளனர். இன்று புதன்கிழமை அதிகாலை 1.30க்கு மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் மற்றுமொரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரும் உயிரிழந்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பத்துப்பேரில் ஆறுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஏனைய நான்குபேரும் பதுளை வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்களாக 48 வயதுடைய ஜுட் ஹென்றிக் 42 வயதான அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி, இவர்களது 19 வயது மகன் ஜுட் ஹெய்ட், பத்து வயது மகள் ஜுட் ஷெரேபி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 34 வயதான லிஸ்டரர், அவரது 27 வயதான மனைவி லிஸ்டர் நிசாலி இவர்களின் இரட்டைக் குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா, ஹனாலி ஆகியோரும் நிசாலியின் தந்தையரான 56 வயதுடைய ரெலிங்டன் ஸொப்ஸ், 53 வயதான ரெலிங்டன் செல்பியா ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஜுட் ஹென்றிக்கின் ஒரு மகளும் மற்றுமொருவருமாக இருவர் படுகாயமடைந்த நிலையில் பாதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிசாலியின் குடும்பத்தினைச் சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

கொழும்பில் உள்ள உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதற்காக இவர்கள் கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு ஹயேஸ் வாகனம் ஒன்றில் சென்றிருந்தனர்.

அங்கு பயணத்தை முடித்துக் கொண்டு. அம்பாறையில் உள்ள உறவினர்கள் சிலரின் வீடுகளுக்குச் செல்வதற்காக நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோதே, பதுளை, மஹியங்கனை வீதியில் இன்று அதிகாலை 1.30க்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்துடன் இவர்கள் பயணம் செய்த ஹயேஸ் வான் நேருக்கு நேராக மோதியுள்ளது.

ஹயேஸ் வாகனத்தின் சாரதி நித்திரை கொண்டதால் தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர். பேருந்தில் பயணம் செய்தவர்களில் ஆறு பேருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் விசாரணைகள் தொடருகின்றன.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயேஸ் வாகனம் ஒன்று கடந்த சனிக்கிழமை அதிகாலை புத்தளம் ஆரட்சிக்கட்டுவ பிரதேசத்தில் வீதியோரமாக தரித்து நிள்ற பெற்றோல் தாங்கி வாகனம் ஒன்றுடன் மோதி பெண்ணொருவர் உயிரிழந்தார்.

லண்டனில் இருந்து கடந்த ஆறாம் திகதி கொழும்புக்கு வந்த 48 வயதான கலாநிதி முருகச்சுடர் என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்தார்.

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த 65 வயதான சுந்தரேசன் என்பவர் கடந்த வாரம் பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.

விசுவமடுவுக்குச் சென்று விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் செல்லும்போது, அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பூநகரியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றுக்குள் விழுந்து காயமடைந்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் 27 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் கூறுகின்றனர்.