வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஊடக சுதந்திரம்

தண்டனைக் குற்றவியல் சட்டத்தின் படி தாக்கிக் காயப்படுத்தல் பிரிவின் கீழ் ஊடகவியலாளர் மீது வழக்கு

ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறார் சட்டத்தரணி
பதிப்பு: 2019 ஏப். 20 22:56
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 20 23:28
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் இன்று சனிக்கிழமை இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு நீதிபதியின் இல்லத்தில் இன்று மாலை தவசீலன் முன்னிலையானார். ஏதிர்வரும் 30 ஆம் திகதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இலங்கைக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (Penal Code) பிரிவு 314 இன் கீழ் முல்லைத்தீவுப் பொலிஸார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். கடமை நேரத்தின்போது தன்னைத் தாக்கியதாக முல்லைத்தீவில் உள்ள இலங்கை அரசின் கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர், ஊடகவியலாளர் தவசீலனுக்கு எதிராக முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.
 
அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே முல்லைத்தீவுப் பொலிஸார் இலங்கைக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளளனர்.

ஆனால் குறித்த அந்தக் கடற்படை அதிகாரியைத் தாக்கவில்லை என்றும் மக்கள் நடத்திய போராட்டத்தையும் அங்கு நின்ற ஊடகவியலாளர்களையும் அந்தக் கடற்படை அதிகாரி படம் எடுத்தால், அவர் யார் என்று மாத்திரமே கேட்டதாகவும் தவசீலன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தவசீலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கணேஸ்வரன், கடற்படை அதிகாரியின் குற்றச்சாட்டை நிராகரித்தார். தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் கடற்படை அதிகாரியின் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று சட்டதரணி கணேஸ்வரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கடந்த 07.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்திருந்தனர். அப்போது செல்வபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் படம் எடுத்தார்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் அவர் அச்சுறுத்தினார். இவருடைய செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர் தவசீலன் குறித்த அந்த நபரிடம் கேள்வி கேட்டார்.

ஆனால் எதையும் கூறாமல் அந்த நபர் தப்பியோடிவிட்டார். ஆனாலும் பொது மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்ட அந்த நபரை விசாரித்தபோது, தான் இலங்கைக் கடற்படை அதிகாரியெனக் கூறியுள்ளார்.

இதன் காரணத்தினாலேயே தவசீலன் இலங்கைப் பொலிஸாரால் சென்ற 18 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். நேற்று வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், இன்று சனிக்கிழமையும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மாலையே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.