இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் தொடர்ச்சியாக

கொழும்பு நகருக்குள் குண்டுகள் பொருத்தப்பட்ட லொறி உள் நுழைந்துள்ளதாக இலங்கைப் புலனாய்வு அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளதாக ரொய்டர் கூறுகிறது
பதிப்பு: 2019 ஏப். 23 16:42
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 23 23:42
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை இலக்கு வைத்து கொழும்பு நகருக்குள் குண்டுகள் பொருத்தப்பட்ட லொறி ஒன்று உள்நுழைந்துள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் மேலும் சில குண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் கொழும்பு நகருக்குள் வந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் தலைமையகம் ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள தமது பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
ஐந்து மோட்டார் சைக்கிள்கள், கப் ரக வாகனம் ஒன்று தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை போத்தல் மற்றும் கலன்களுக்கு பெட்ரோல் விநியோகிக்க வேண்டாமென இலங்கையில் உள்ள சகல எரிபொருள் நிலையங்களுக்கும் இலங்கைப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையின் தலைநகர் கொழும்பு அதன் புநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளதாக அமெரிக்கச் செய்தி நிறுவனமான ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் ஐ.எஸ் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் எதுவுமே கூறவில்லை.

எனினும் உயிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்பு நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பதில் தாக்குதலாக இருக்கலாமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.