உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து

இலங்கை அரசாங்கம் வழங்கிய குண்டு துளைக்காத வாகனம் - பேராயர் மெல்கம் ரஞ்சித் நிராகரித்தார்

சந்தேகிக்கப்படும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் விசாரிக்கப்படவில்லையெனவும் கேள்வி
பதிப்பு: 2019 ஏப். 30 16:02
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 30 21:17
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterSunday
#EasterAttacksSL
#Srilankaterrorattack
#MalcolmRanjith
இலங்கையில் சென்ற 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அடுத்து இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு கோரியிருந்தார். பேராயரின் வேண்டுகோளைப் பரிசீலித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பேராயரின் பாதுகாப்புக் கருதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பேராயர் மெல்கம் ரஞ்சித் அதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். கொழும்பு புஞ்சி பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராயர் மெல்கம் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். மக்களின் பாதுகாப்பே முக்கியமானதென்றும் பேராயர் வலியுறுத்தினார்.
 
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு வழங்குவதோடு நின்றுவிடாது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணி குறித்து அறியுமாறும், சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்ததாகவும் பேராயர் கூறியுள்ளார்.

ஆனால் இதுவரையும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லையென்று குற்றம் சுமத்திய பேராயர் மெல்கம் ரஞ்சித், இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணை நடவடிக்கைகளிலும் அதிருப்தி வெளியிட்டார்.

குண்டு துளைக்காத வாகனம் தனக்கு அவசியம் இல்லை என்றும் கூறிய பேராயர், தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் போதுமானவையல்ல எனவும் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, நேற்றுத் திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித், அரசாங்கத்தின் விசாரணையில் நம்பிக்கை இல்லையென்றும் வீதியில் இறங்கிப் போராடவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

அத்துடன் அமைச்சர்கள் சிலருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புள்ளதாகச் சந்தேகி்க்கப்பட்டால், ஏன் இதுவரை உரிய விசாரணை நடத்தப்படவில்லையெனவும் கேள்வி எழுப்பினார்.