கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில்

வவுணதீவு பொலிஸார் படுகொலை - கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியை விடுவிக்க மைத்திரி இணக்கம்

நிரபராதியின் விடுதலையை வலியுறுத்துவதற்கு கூட கூட்டமைப்பு திராணியற்றதா? மக்கள் விசனம்
பதிப்பு: 2019 மே 01 12:09
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மே 02 21:45
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Batticaloa
#Srilanka
#SlPolice
#ManoGaneshan
#EasterAttackSl
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இலங்கைப் பொலிஸார் இருவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர், கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுதலை செய்வதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் இலங்கைப் பொலிஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் குறித்த முன்னாள் போராளிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற விடயம் அம்பலமானதை அடுத்து, அவரை விடுவிக்குமாறு அமைச்சர் மனோகணேசன் விடுத்த கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு உறுதியளித்துள்ளதாகக் கூர்மை செய்தித்தளத்திற்கு அமைச்சரின் ஊடகப் பிரிவு, உறுதிப்படுத்தியது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிசாரைக் கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி, கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசனிடம் சர்வதேச தொழிலாளர் தினமான இன்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அஜந்தனின் மனைவி செல்வராணிக்கு, அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், அஜந்தனின் விடுதலை தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மௌனம் காத்தமை ஏன் என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட முறுகலைத் தீர்த்து வைப்பதற்கு அயராது உழைத்த தமிழ் அரசியல்வாதிகள், கடந்த ஐந்து மாதங்களாக எவ்வித குற்றமும் புரியாமல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழ் குடும்பத் தலைவன் குற்றம் புரியவில்லை என உறுதியான பின்னரும் அவரை விடுவிக்க முயற்சிக்காதமை ஏன் என்று மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.