இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்

சீன விஞ்ஞானிகள் நால்வர் பலி, ஐவர் காயம் - சீனா அறிவிப்பு

இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்குப் பாதுகாப்பை வழங்குமாறும் கோரிக்கை
பதிப்பு: 2019 மே 01 22:56
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 02 21:32
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterAttackSl
#chinese
#china
#Srilanka
#ISIS
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 42 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டும் ஐந்துபேர் படுகாயமடைந்தும் மேலும் பன்னிரண்டு பேரைக் காணவில்லையெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு சென்ற 29 ஆம் திகதி அறிவித்திருந்தது. இந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் நால்வர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து சீன விஞ்ஞானிகள் காயமடைந்த நிலையில் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடவடிக்கைகளுக்காகக் கடந்த ஏப்ரல் மாதம் கொழும்புக்குப் பயணம் செய்திருந்தனர். அவர்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டும் ஐந்துபேர் காயமடைந்துமுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
 
இறந்தவர்களின் சடலங்களை, உறவினர்கள் கொழும்புக்கு வருகை தந்து, அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தூதரகம் கூறியள்ளது.

சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த ஐந்துபேர் காயமடைந்து மேலதிகச் சிகிச்சைக்காக சீனாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சீனாவின் ஷின்ஹூவா செய்தி நிறுவனமும் கூறியுள்ளது.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களையடுத்து இலங்கையிலுள்ள சீனத் தூதரகம், சீன நிறுவனங்கள், சீனாவின் ஒத்துழைப்புடன் இடம்பெறும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் சீனப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம், சீன அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும் சீன நலன்களுக்கு மேலதிக பாதுகாப்பு அவசியமெனவும் சீனா கூறியுள்ளது.

அதேவேளை, இலங்கையில் பணியாற்றும் சீனப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் உள்ள தமது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சவூதி அரேபிய அரச தொலைக்காட்சியான அல் எக்பாரியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.